undefined
undefined
15 ஆண்டுகளாக நீதிக்கு போராடிய நெல்லை பெண்
காவல்துறை ஆய்வாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 15 ஆண்டுகளாக நீதிக்கு போராடிய பெண்ணுக்கு வட்டியுடன் நஷ்டஈட்டு கொடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சந்தீஸ்வரநாயனார் தெருவைச் சேர்ந்த சுப்பராமன் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி 1984ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், நாகல்குளத்தில் வசித்து வந்தபோது நாங்குனேரி காவல்துறை ஆய்வாளராக மங்களா தன்ராஜ் பணியாற்றி வந்தார்.
சுப்புலட்சுமிக்கும் அவரது உறவுப் பெண் ஒருவருக்கும் இடையே சொத்துப் பிரச்சனை தொடர்பாக காவல்துறை ஆய்வாளர் மங்களா தன்ராஜ் வீட்டுக்கு சுப்புலட்சுமி சென்றபோது அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இந்த வழக்கில் தன்ராஜிக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை உதவி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் பாதிக்கப்பட்ட சுப்புலட்சுமிக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாயை 13.4.98 அன்று அரசு வழங்கியது. மீதமுள்ள தொகையையும் தர வேண்டுமென்று உயர் நீதிமன்றத்தில் சுப்புலட்சுமி மனு தாக்கல் செய்தார். அந்தத் தொகையை 9 சதவீத ஆண்டு வட்டியுடன் கொடுக்க வேண்டுமென்று அரசுக்கு தனி நீதிபதி 18.11.09 அன்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் உள்துறை செயலர் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அதை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பிறப்பித்த உத்தரவில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் சமுதாயத்தில் சுதந்திரமாக நடமுடியாதபடி சுப்புலட்சுமி துன்பமும், துயரமும் அடைந்தார். 15 ஆண்டுகளாக அவர் அனுபவித்த துன்பத்தை வர்ணிக்க முடியாது. நீதி பெறுவதற்காக அவரது வீடு உட்பட அனைத்து உடமைகளையும் விற்பனை செய்துள்ளார்.எனவே காவல்துறை ஆய்வாளர் செய்த குற்றத்துக்காக அவர் சார்பில் ரூ.10 லட்சம் நஷ்டஈட்டை வழக்க வேண்டியது அரசின் கடமை. சட்டத்தை அமல்படுத்தி மக்களின் உயிர், உடமைகளை காப்பாற்ற வேண்டிய இன்ஸ்பெக்டரே இப்படி காட்டுமிராண்டித் தனமான பாலியல் குற்றத்தை செய்து 28 வயதிலிருந்து ஒரு பெண்ணை நடைப்பிணமாக்கியதற்கு அரசுதான் பொறுப்பேற்று நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.
பாலியல் பலாத்காரம் நடந்து 16 ஆண்டுகள் கழித்து 2000ஆம் ஆண்டில் சுப்புலட்சுமி நஷ்டஈடு கோருவது காலதாமதமான நடவடிக்கை என்பதால் அதை ஏற்க முடியாது என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அந்த வாதத்தில் வலு இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.
ஏனென்றால் சட்டத்தின் பாதுகாவலனே இப்படிப்பட்ட கொடூர குற்றத்தை செய்துள்ளார். அதுமட்டுமல்ல நஷ்டஈடாக தரப்படும் இந்தத் தொகையால் சுப்புலட்சுமியின் மனக் காயங்களை ஆற்ற முடியாது. அந்தப் பெண்ணின் இயல்பு வாழ்க்கையை இந்தத் தொகையால் மீட்கவும் முடியாது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நீதியைப் பெறுவதற்காக 15 ஆண்டுகள் அந்தப் பெண் போராடி இருக்கிறார். எனவே அவருக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரிதான். எனவே ரூ.9 லட்சம் தொகையை 9 சதவீத ஆண்டு வட்டியுடன் இன்னும் 6 வாரத்துக்குள் சுப்புலட்சுமிடம் அரசு கொடுக்க வேண்டும். இந்தத் தொகையை சிறையில் இருக்கும் மங்களா தன்ராஜிடம் இருந்து அரசு வசூலித்துக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 comments :
Post a Comment