இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் கதிரவன், மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மனித நேய கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா, இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக், குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு. தமிழரன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கை, சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள அனுமதி, ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றின் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் விஷம் போல் உயர்ந்து கொண்டே வருகின்றன. பெட்ரோலின் விலை கடந்த ஆறு மாதத்தில் ஏழு முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் செய்வதறியாது திகைக்கின்றனர். ஒரு கிலோ, அரை கிலோ என்ற அளவில் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்த மக்கள் இப்போது எண்ணி, எண்ணி வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்வு காரணமாக, மக்கள் பெருத்த இன்னலுக்கு ஆளாகியுள்ள இந்தச் சூழ்நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்பட பல்வேறு ஊழல்களில் மத்திய அரசும், தி.மு.க. அரசும் ஈடுபட்டு இருப்பது இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் அரசுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைத்திருக்கும் என்பதும், அதன் மூலம் விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் என்பதும் மக்கள் மத்தியில் தற்போது பரவலாக உள்ள ஒரு கருத்தாகும்.
இந்தச் சூழ்நிலையில், விலை உயர்விற்கும், ஊழல்களுக்கும் காரணமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும், தி.மு.க. அரசையும் எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் 20.1.2011 அன்று டெல்லியில் கூடி விவாதித்தன.
இதையடுத்து, தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை எதிர்த்து 3.2.2011 முதல் 9.2.2011 வரை நாடு தழுவிய இயக்கத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.
இந்த முடிவிற்கேற்ப, அ.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் 8-2-2011 அன்று தமிழகத்தில் விலைவாசி உயர்வு எதிர்ப்பு இயக்கம் நடத்திட திட்டமிட்டுள்ளன.
இதன்படி, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியா வசியப் பொருட்களை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்துவதற்கு தடை விதித்தல், பொது விநியோக முறையை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றுதல், இருப்பில் உள்ள கூடுதல் உணவு தானியங்களை மானிய விலையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு விநியோகித்தல், பதுக்கல், கடத்தல் ஆகிய வற்றில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்தல், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய ஆதார விலையை வழங்குதல்,
மானிய விலையில் உரம் மற்றும் இடுபொருட்கள் அளித்தல், பெட்ரோலின் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள அனுமதித்ததை ரத்து செய்தல், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரத்து செய்தல், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவதை தடுத்தல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அளித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8-2-2011 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை தொடர் முழக்கம் எழுப்பும் போராட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலன்களை வலியுறுத்தி நடைபெறும் இந்தத் தொடர் முழக்கப் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துத் தரப்பு மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment