background img

புதிய வரவு

ஏழைகளுக்கு உதவவா உரிமம் அளித்தார் இராசா?

“இராசா இந்தத் (தொலைத் தொடர்புத்) துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செய்த குற்றம் என்ன என்று பார்த்தால், ஏழை. எளிய மக்களுக்கும் சேல்போனை கொண்டு சென்றதுதான” என்று தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி, சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற தி.மு.க.பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

இவ்வாறு கூறியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. “செல்போன் பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமானதாக இருந்தது. இப்போது நாற்று நடச் செல்லும் பெண்களும், தையல் வேலைக்குச் செல்லும் பெண்களும் செல்போனை பயன்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த விலையில், குறைந்த வாடகையில் செல்போன் பயன்படுத்துவதற்கான நிலையை ஏற்படுத்திய பெருமை இன்று டெல்லிச் சிறையில் வாடும் இராசாவிற்கு உண்டு” என்று பொருந்தாத புகழ் சூட்டி, இராசாவை தொடாமலேயே உச்சி மோந்துள்ளார் கருணாநிதி.

‘கேட்பவன் கேணையனாக இருந்தால், எதையுத் திரிப்பார்கள்’ என்ற சமீபகால பழமொழிக்கு இணங்க, எதிரில் கூடியிருக்கும் தன் கட்சித் தொண்டர்களின் சிந்தையறிந்து சிறப்பாக, உருக்கமாக பேசியுள்ளார் கருணாநிதி. அவருக்கு இதெல்லாம் வாய் வந்த கலை. ஓராண்டா, ஈராண்டா... 70ஆண்டுக்கால அரசியல் அனுபவமல்லவா?

தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்து, அதனால் அத்துறைக்கு இராசா ஏற்படுத்திய இழப்பு 1.76 இலட்சம் என்று மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் தனது அறிக்கையில் மிகத் தெளிவாகவே கூறியுள்ளார்.

“இவ்வளவு பெரிய முறைகேட்டை ஒரே ஒருவர் மட்டுமே செய்துவிட முடியுமா?என்று கேட்டு நம்மையெல்லாம் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டின் முதல்வர், இந்த முறைகேட்டால் எந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெற்றார்கள் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், கடந்த புதன்கிழமை கைது செய்த முன்னாள் அமைச்சர் இராசாவையும், அவரோடு கைது செய்யப்பட்ட தொலைத்தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த் பெஹூரியா, இராசாவின் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோரையும் டெல்லி ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நிறுத்தியது.

அப்போது, இராசா உள்ளிட்ட அந்த மூவர் மீது உள்ள வழக்கு என்ன என்பதை நீதிபதி ஓ.பி.சைனிக்கு எடுத்துரைத்த ம.பு.க. வழக்குரைஞர் அகிலேஷ், “முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, 2 ஜி அலைக்கற்றைகளை 2001ஆம் ஆண்டு விலையில் ஒதுக்கீடு செய்துள்ளனர். இதில் தங்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த உரிமத்தைப் பெற்ற நிறுவனங்களுக்கு முன்பே தெரியும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

ஆ.இராசா உதவிய முக்கியமான இரண்டு நிறுவனங்களை ம.பு.க.வழக்குரைஞர் நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்து, அதில் நடந்த முறைகேட்டினால் ஏற்பட்ட இழப்பைக் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts