
புலம் பெயர்ந்து வாழும் , வாக்களித்து தேர்வு செய்த பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ தேச அரசு எதற்காக என்பதை விளக்கும் கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
உலகின் 85 நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாடாளுமன்றமாக அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ தேச அரசின் முதல் கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. அதில் பிரதமராக ருத்ரகுமாரன் தேர்வு செய்யப்பட்டார். துணைப் பிரதமர், பேரவைத் தலைவர், அமைச்சர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலையை அரசியல் தளத்தில் மேற்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, அதற்கான பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை முன்னெடுப்பதற்கு அந்தந்த நாடுகளில் உள்ள ஜனநாயக வழிமுறைகளில் திட்டமிட்டு செயல்படுவது நாடு கடந்த தமிழீழ தேச அரசின் நோக்கமாகும். இவ்வமைப்பில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளனர்.
இவ்வமைப்பின் நோக்கமும் செயல்பாடும் என்னவென்பதை விளக்க நாடு கடந்த தமிழீழ தேச அரசு தோழமை மையம், சென்னையில் இன்று மாலை கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தியாகராயர் நகரில் அபிபுல்லா சாலையில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் கொளத்தூர் மணி, இயக்குனர் மணிவண்ணன், இந்திய தெளஹீத் ஜமாத் இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.எம்.பாக்கர், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சி.இராசன், இதழாளர்கள் கா.அய்யநாதன், தே.சீ.சு.மணி, மருத்துவர் எழிலன் ஆகியோர் பேசுகின்றனர். இக்கருத்தரங்கிற்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்குகிறார், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு அறிமுக உரையாற்றுகிறார்.
0 comments :
Post a Comment