WD |
தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்றிரவு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், இன்றைக்கு கூட்டப்பட்டுள்ள இந்த பொதுக்குழு மிகமிக முக்கியமானது. பொதுக்குழு கூட்டப்படுகின்ற நேரத்தில் வழக்கம்போல் வந்துள்ள ஒரு சோதனை இன்றைய தினம் நம்மையெல்லாம் ஓரளவு கலங்க வைத்திருக்கிறது, அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நம்முடைய மகிழ்ச்சியை, ஆர்வத்தை குறைக்கின்ற நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்பதை நான் சொல்கிறேன், நீங்கள் எல்லாம் சொல்லாமல் இருக்கின்றீர்கள், அவ்வளவுதான். ஆனால், உண்மையினுடைய ஒளி விரைவில் தெரியத்தான் போகிறது.
தி.மு.க.வினுடைய வரலாற்றில் நேற்றும், இன்றும் நாம் சந்தித்து இருக்கின்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்திருக்கின்றன. அப்படி நிகழ்ந்தபோதெல்லாம் "எதையும் தாங்கும் இதயம் உண்டு'' என்ற அண்ணாவுடைய அந்த வைர வரிகள் நமக்கு ஆசானாக நின்று ஊக்கப்படுத்தியிருக்கின்றன, வழிகாட்டியிருக்கின்றன. சட்டமன்றத்திற்கான தேர்தல் வர இருக்கிறது. இத்தனை நாட்களில் நாம் தேர்தல் களத்தில் இறங்க இருக்கிறோம் என்ற அளவில் அந்தக் கட்டம் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது.
டெல்லியில் ஒரு மாநாடு. உள்நாட்டு பாதுகாப்புக்காக அந்தந்த மாநில முதலமைச்சர்கள் செய்திருக்கின்ற ஏற்பாடுகளை பற்றியெல்லாம் விவாதித்து எந்த வகையிலே அந்தப் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தலாம் என்பதற்காக நடைபெற்ற மாநாடு. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற நான் தேர்தலும் விரைவிலே வருகின்ற காரணத்தால் அதைப் பற்றியும் விவாதித்துவிட்டு வரலாம் என்று அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அதை பற்றியும் பேசிவிட்டு வந்திருக்கிறேன்.
செய்தியாளர்கள் டெல்லி பயணம் எப்படி இருந்தது கேட்டார்கள், வானம் நிர்மலமாக இருந்தது. எந்த தடையும் எந்த இடையூறும் இல்லை, விமானம் ஒழுங்காக பறந்து வந்தது என்று சொன்னேன். வெற்றியா இல்லையா என்று சொல்லுங்கள் என கேட்டார்கள் வெற்றி தான் என்று சொன்னேன்.
0 comments :
Post a Comment