background img

புதிய வரவு

தெற்காசிய தடையற்ற வாணிப ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும்: சார்க் மாநாட்டில் நிருபமா ராவ் வலியுறுத்தல்


தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான வாணிப ஒப்பந்தத்தை முறையாக செயல்படுத்த வேண்டுமென தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் மாநாட்டில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் இதனை முறையாக நடைமுறைப்படுத்தாததை சுட்டிக் காட்டும் வகையில் அந்நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் நிருபமா ராவ் இவ்வாறு தெரிவித்தார்.
சார்க் நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் மாநாடு பூடான் தலைநகர் திம்புவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதில் பிற உறுப்பு நாடுகளான வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிருபமா ராவ் பேசியது: தெற்காசிய நாடுகளிடையே 2006-ல் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வாணிப ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் வர்த்தக உறவு வலுப்படும். சில நாடுகள் தங்களுக்குச் சாதகமான வணிக ஒப்பந்தங்களை மட்டும் நிறைவேற்றுகின்றன.
சார்க் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருக்கிறது. எனெனில் நமது தெற்காசியப் பிராந்தியத்தின் வளர்ச்சியை முக்கியமாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.
சுகாதாரம், கல்வி, வேளாண்பொருள் பரிமாற்றம், நீர் ஆதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் மேலும் சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். நாடுகள் ஒன்றை ஒன்று மதித்து நடக்க வேண்டும். நமக்கிடையே இருக்கும் ஒற்றுமை மூலம் தான் சர்வதேச அளவில் நாம் போட்டியிட முடியும் என்றார் நிருபமா ராவ்.
பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் பேசியது: ஒத்துழைப்பு என்பது மட்டுமே இப்போதைய நமது தேவை. இந்தக் கூட்டத்தின் முடிவில் நல்ல முடிவுகள் எட்டப்படும் என்று நம்புகிறேன்.
பயங்கரவாதம் என்பது உலகளாவிய பிரச்னை. இதனால் சர்வதேச சமூகத்துக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதற்காக குறிப்பாக எந்த நாடையும், எந்த பிராந்தியத்தையும் சுட்டிக்காட்டி குற்றம்சாட்டக் கூடாது. நாகரிக சமூகத்தில் தலையெடுக்கும் எந்த வகையான பயங்கரவாதமும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டியதுதான் என்றார் பஷீர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts