background img

புதிய வரவு

2ஜி முறைகேடு தொடர்பான உண்மையை கூறத் தயார்: சித்தார்த் பெஹூரா


2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், என்ன நடந்தது என்பதை முழுமையாகத் கூறத் தயார் என்றும் இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவுடன் கைது செய்யப்பட்டுள்ள தொலைத் தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த் பெஹூரா கூறியுள்ளார்.

2ஜி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆ.இராசா, சித்தார்த் பெஹூரா, இராசாவின் தனிச் செயலராக இருந்த ஆர்.கே.சண்டோலியா ஆகிய மூவரும் நேற்று டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வுக் கழக சிறப்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.அவர்களை 5 நாள் விசாரணைக் காவலில் வைத்திருக்க ம.பு.க.விற்கு நீதிபதி ஓ.பி.சைனி அனுமதி அளித்தார்.

நீதிமன்றத்தில் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹூரா சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் எஸ்.எஸ்.காந்தி, “இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சித்தார்த் எவ்வித குற்றமும் செய்யாதவர். நடந்தது என்ன என்பதை அவர் முழுமையாக ம.பு.க.விற்கு கூறிடத் தயாராக உள்ளார்” என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் 5 நாள் விசாரணைக் காவலை வழக்குரைஞர் காந்தி எதிர்க்கவில்லை. ஆனால் இராசாவின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் ரமேஷ் குப்தா எதிர்த்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், இராசாவிற்கு முன்பு இருந்தவர்கள் என்ன செய்தனரோ அதைத்தான் இராசாவும் கடைபிடித்தார், எனவே அவர் குற்றமற்றவர் என்று குப்தா வாதிட்டுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அமைச்சர் ஆ.இராசா மேற்கொண்ட நடவடிக்கைகளை சித்தார்த் பெஹூரா அப்போதே எதிர்த்துள்ளார் என்றும், ஆனால் அவருடைய எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஆ.இராசா அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததாக தனது கட்சிக்காரர் தன்னிடம் தெரிவித்ததாகவும் வழக்குரைஞர் காந்தி கூறியுள்ளார்.

ஆயினும் இவ்வழக்கில் சித்தார்த் அரசு தரப்பு சாட்சியாளராக (அப்ரூவர்) மாறப்போவதில்லை என்று கூறிய வழக்குரைஞர் காந்தி, சித்தார்த் மறைப்பதற்கு ஏதுமற்றவர், அவர் தொலைத் தொடர்புத் துறையின் செயலராக பொறுப்பேற்பதற்கு முன்னரே 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சராக இருந்த ஆ.இராசா முடிவெடுத்துவிட்டார் என்றும், அதனை அப்போதே சித்தார்த் எதிர்த்துள்ளார் என்றும், இவை யாவும் ம.பு.க. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ளதெனவும் கூறியுள்ளார்.

முதலில் வரும் நிறுவனத்திற்கு முதலில் உரிமம் என்று கூறி தேதியை அமைச்சர் இராசா மாற்றியமைத்தது ஜனவரி 7ஆம் தேதியென்றும், அதற்கு 6 நாட்களுக்கு முன்னர்தான் சித்தார்த் துறைச் செயலராக சேர்ந்தார் என்றும் காந்தி கூறியுள்ளார்.

தனது மனைவிக்கு மருத்துவமனையில் நடைபெறும் அறுவை சிகிச்சைக்கு முன்னரும், முடிந்த பிறகும் பார்ப்பதற்கு சித்தார்த் பெஹூராவிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ம.பு.க. விசாரணையில் மிகச் சாமர்த்தியமாக இராசா பதிலளித்து வந்துள்ளார் என்றும், இப்போது சித்தார்த் கூறப்போகும் உண்மைகளின் அடிப்படையில் இராசா விசாரிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts