background img

புதிய வரவு

சுப்பிரமணியன் சுவாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பான வழக்கு தில்லியில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சுப்பிரமணியன் சுவாமி ஆஜரானார்.
இந்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட சிலரையும் சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. சுப்பிரமணியன் சுவாமியின் மேற்படி புகார் தொடர்பாக அவருக்கு முதல்வர் சார்பில் வழக்கறிஞர் மூலம் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீஸ் விவரம்:
பொது வாழ்வில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருபவர் முதல்வர் கருணாநிதி. தி.மு.க. தலைவராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் மூத்த அரசியல்வாதியாக மதிக்கப்படுகிறார்.
2 ஜி அலைக்கற்றை வழக்கு சி.பி.ஐ. விசாரிக்கும் தன்மையைவிட விரிவானது என்றும், இதில் நாட்டின் பாதுகாப்புக்குக் கவலை தரும் விஷயங்கள் உள்ளடங்கி இருப்பதாகவும், ""தமிழக முதல்வருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும்'' நீங்கள் கூறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனிப்பட்ட அரசியல் விரோதம் காரணமாகவும், மலிவான விளம்பரம் தேடும் நோக்கிலும் நீங்கள் தெரிவித்த இந்தக் கருத்து, முதல்வர் கருணாநிதியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
தவறானது என்று தெரிந்தும், எமது கட்சிக்காரரின் (முதல்வர் கருணாநிதி) புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதைக் கூறியிருக்கிறீர்கள்.
2 ஜி அலைக்கற்றை எனப்படும் இந்த வழக்கில் எனது கட்சிக்காரருக்குத் தொடர்பு இருப்பதாக எந்தத் தகவலும் உங்களிடம் இல்லை என்று எமது கட்சிக்காரர் (கருணாநிதி) தெரிவிக்கிறார்.
இந்த 2 ஜி அலைக்கற்றை விஷயத்தில் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். அவருடைய நற்பெயரை இதில் சேர்க்கும் உங்களின் முயற்சி உள்நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளார். மேற்படி கருத்து அவருடைய நற்பெயருக்குக் களங்கம் கற்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்ததுபோல அமைந்துள்ளது.
எனவே, தங்களது இந்தக் கருத்தை 24 மணி நேரத்துக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் தங்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியின் சார்பில் வழக்கறிஞர் பி.ஆர். ராமன் இந்த நோட்டீûஸ அனுப்பியுள்ளார்.

இதுபற்றி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்து:
முதல்வர் பெயரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் நீதிமன்றத்தில்தான் தெரிவிக்கப்பட்டன. எனவே இது குறித்து நோட்டீஸ் அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கோ அல்லது அதை வெளியில் தெரிவித்தமைக்கோ சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது.
இது பற்றிய சட்ட விவரங்கள் தெரியாமல் நோட்டீஸ் அனுப்பியதாகச் செய்தி வெளியாகியுள்ளது. எனக்கு அதுபோன்ற நோட்டீஸ் எதுவும் இதுவரை வரவில்லை என்றார் சுவாமி.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts