background img

புதிய வரவு

இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!


என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.



ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல் ..

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

தலைமைச் செயலக மாற்றம்:பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்


இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தனது அனுமதியின்றி, தமிழக அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்ற எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
புதிய தலைமைச் செயலக வளாகம்
ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகத்தினை முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி மருத்துவமனையாக மாற்ற அஇஅதிமுக அரசு முடிவெடுத்துவிட்டதாகக் கூறி வீரமணி என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுச்செய்திருக்கிறார்.
அம்மனு தீர்ப்பாயத்தின் சென்னைப் பிரிவின் முன் நிலுவையில் இருக்கிறது.
ஆனால் ஓமந்தூரார் தோட்டத்திலிருந்து மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றத்தினையும் தலைமைச் செயலகத்தையும் மாற்றுவதென்ற அஇஅதிமுக அரசின் முடிவில் தலையிடமுடியாதென வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, கடந்த வாரம்தான் ஓமந்தூரார் வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவினை அரசு தொடங்கியது.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சென்னைப் பிரிவு பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் வீரமணியின் மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சொக்கலிங்கம் மருத்துவமனையாக மாற்ற வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிக்கெதிரான மனு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது மருத்துவமனை தொடங்க அவ்வளவு அவசரம் காட்டவேண்டிய அவசியமென்ன என்ன என்று அரசைக் கடிந்துகொண்டார்.
மேலும் இது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டினை நாளைக்குள் தீர்ப்பாயத்தின் முன் தெரியப்படுத்தவேண்டுமெனவும் நீதிபதி சொக்கலிங்கம் உத்திரவிட்டார்.

விஸ்வரூபம் தடை நீங்கியது


நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடை உத்தரவு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 25 அன்று விஸ்வரூபம் வெளியாகவிருந்தது, ஆனால் பல்வேறு முஸ்லீம் அமைப்புக்களின் எதிர்ப்பின் பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் இருவாரத் தடை விதித்தது.
கமல்ஹாசன் தரப்பினர் சென்னை நீதிமன்றத்தினை அணுகியபோது, ஒரு நீதிபதி அரசின் தடையினை நிறுத்திவைத்து உத்திரவிட்டாலும் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அரசின் மேல் முறையீட்டினை ஏற்று தடை தொடரும் எனக் கூறிவிட்டது.

பின்னர் நேற்று தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது சில ஆட்சேபிக்கப்பட்ட காட்சிகளை நீக்குவதாக கமல்ஹாசன் ஒத்துக்கொண்ட நிலையில் முஸ்லீம் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.


முக நூல்

Popular Posts