நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடை உத்தரவு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 25 அன்று விஸ்வரூபம் வெளியாகவிருந்தது, ஆனால் பல்வேறு முஸ்லீம் அமைப்புக்களின் எதிர்ப்பின் பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் இருவாரத் தடை விதித்தது.
கமல்ஹாசன் தரப்பினர் சென்னை நீதிமன்றத்தினை அணுகியபோது, ஒரு நீதிபதி அரசின் தடையினை நிறுத்திவைத்து உத்திரவிட்டாலும் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அரசின் மேல் முறையீட்டினை ஏற்று தடை தொடரும் எனக் கூறிவிட்டது.
பின்னர் நேற்று தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது சில ஆட்சேபிக்கப்பட்ட காட்சிகளை நீக்குவதாக கமல்ஹாசன் ஒத்துக்கொண்ட நிலையில் முஸ்லீம் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.
0 comments :
Post a Comment