background img

புதிய வரவு

கேட்ட வரங்களைத் தட்டாமல் அருளும் நரசிம்மர்

கீழப்பாவூர்

‘மூர்த்தி, தீர்த்தம், தலம் முறையாய்த் தொடங்கினார்க்கு, வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே’ என்பது தாயுமானவர் பாடிய பராபரக்கண்ணி பாடல். ஒவ்வொரு ஆலயமும் மூர்த்தி, தலம், தீர்த்தம், ஸ்தோத்திரம், விருட்சம், தியானம், தவம், விரதம், வேள்வி என்னும் ஒன்பது அம்சங்களில் ஏதாவதொன்றில் சிறப்பு பெற்றிருக்கும். அவற்றுள் ஒன்று கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம். நரசிம்மர் தானே விரும்பி இத்தலத்தில் ரிஷிகளுக்கு காட்சி தந்து, நிரந்தரமாகக் குடி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.



குளங்கள், கால்வாய், வயல்கள், தென்னந்தோப்புகள் சூழ்ந்த கவின்மிகு பகுதியில் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். இங்கு நரஹரியுடன் வெங்கடாஜலபதியும் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு. கிழக்கு பார்த்த தனிச் சந்நதியில் பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்திலும், அதனையொட்டி பின்பகுதியில் மேற்கு நோக்கிய தனிச் சந்நதியில் த்ரிபங்க நிலையில் நரசிம்மர் இரண்யனை வதம் செய்யும் திருக்கோலத்திலும் அருள்பாலிப்பதைக் காண நெஞ்சு நெகிழ்ச்சியால் விம்முகிறது.

பகவான் நரசிம்மர் அகோபிலத்தில் நிலைத்திருந்தது மிகக் குறுகிய காலம்தான். ஆகவே, நரசிம்மர் தரிசனம் வேண்டி ஆங்காங்கே நதிக்கரைகளிலும், குன்றுகளிலும் தவமிருந்து நரசிம்ம தரிசனம் பெற்றோர் ஏராளம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காஸ்யபர், வருணன், சுகோஷன். இந்த மூவரும், கிருதயுகத்தில் பிரகலாதனுக்கு காட்சி தந்த அதே நரசிம்ம அவதாரத்தைக் கண்டு மகிழ விரும்பினர். அதற்காக திருமாலை நினைத்து கடுந்தவம் புரிந்தனர். அவர்களுடைய ஆயிரக்கணக்கான ஆண்டு கடுமையான தவம் திருமாலின் மனதை இளக்கியது. ‘‘மகா தபஸ்விகளே!

பொதிகை மலையில் 118 தீர்த்தங்களை தாமிரபரணி நீரால் அகத்திய மாமுனிவர் ஏற்படுத்தியுள்ளார். இறவா வரம் பெற்ற ரிஷிகள் நீராடுவதற்காக மலை மீது 86 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான மணிமுத்தா தீர்த்தத்தில் (தற்போதைய பாபநாசம் பாணதீர்த்தம்) புனித நீராடுங்கள். அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே சித்ரா நதி செல்கின்றது. அதுவே தவம் புரிய சிறந்த பகுதி. அங்கிருந்து தவம் புரியுங்கள். நரசிம்மனைக் காண்பீர்கள்!’’ என்று அசரீரியாக அருள் புரிந்தார்.

அதன்படி, முன்பு பிரகலாதனுக்காக தான் மட்டும் தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்ம வடிவிலேயே இப்போது ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் ரிஷிகளுக்கு காட்சியளித்தார் நரசிம்மர். தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிய திருமாலுக்கு நன்றி சொன்னவாறு மனம், மொழி, மெய்யினால் அந்த ரிஷிகள் நரசிம்மமூர்த்தியை ஆராதித்தனர். தேவியரையும் சேர்த்து தரிசித்த ரிஷிகள் நரசிம்மரிடம் அவர் இந்த திருவுருவிலேயே அருள்பாலித்து கலிபுருஷனின் மாயையிலிருந்து பக்தர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

நரசிம்மரின் விருப்பமும் அதுவாகவே இருக்கவே, ரிஷிகளின் கோரிக்கையை ஏற்று கீழப்பாவூர் திருத்தலத்தில் நரசிம்மர் நிரந்தரமாக எழுந்தருளினார். முந்தைய யுகங்களில் பகவானை நேரில் சந்தித்து பக்தர்கள் வணங்கியுள்ளனர். கலியுகத்தில் இது இயலாது என்பதால் தன்னுடைய அவதார வேளையான பிரதோஷ காலத்தில் சிங்க கர்ஜனை செய்து பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார், நரசிம்மர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி வாழ் மக்கள் சிங்க கர்ஜனையைக் கேட்டு வந்துள்ளதாக செவிவழிச் செய்திகள் உள்ளன.

இன்றும் இத்தலத்தில் ரிஷிகள் சூட்சுமமாக நரசிம்மமூர்த்தியை தரிசிப்பதாக ஐதீகம். இப்பகுதி மிகுந்த அமைதியுடன், தூய்மையாகத் திகழ்கிறது. இங்கே மகாலட்சுமி வாசம் செய்வதால் இங்கு பயிர்கள் செழித்து வளர்கின்றன. ஊரும் செல்வச் செழிப்புடன் திகழ்கிறது. இத்தல நரசிம்மரை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிபட்டு திருவருள் பெற்றுள்ளனர். 1200 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இத்தலத்தில் மன்னர்களின் திருப்பணிகளை விவரிக்கும் 42 கல்வெட்டுகள் உள்ளன.

மாறவர்மன் திரிபுவன சக்ரவர்த்தி விக்ரம பாண்டியன் தான் ஆட்சிக்கு வந்த ஏழாவது ஆண்டில் இத்திருக்கோயிலுக்கு நித்ய பூஜைகளுக்கு நிலங்கள் வழங்கியுள்ளான். சடையவர்மன் ஸ்ரீவல்லபன் கி.பி.1101 முதல் கி.பி.1124 வரை இப்பகுதியை ஆட்சி செய்துள்ளான். சடையவர்மன் குலசேகர பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோரின் பெயர்களும் கல்வெட்டில் உள்ளன.

சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் க்ஷத்ரிய சிகாமணி நல்லூர் என்றும் சோழமன்னரின் மனைவியான அறிஞ்சிகைப் பிராட்டியின் பெயரால் அறிஞ்சிகைப்பிராட்டி சதுர்வேதிமங்கலம் என்றும் குறுமணநாடு, முனைமோகர் பாகர், சதுர்வேதிமங்கலம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்பட்டுள்ளது. பாகூர் என்பதே பாவூர் என மருவி இப்போது கீழப்பாவூர் என்றாகிவிட்டது. மேலும் நரசிம்மர் சந்நதி முன்பாக, அவரது உக்கிரத்தைத் தணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நரசிம்ம தீர்த்தம் அமைந்திருப்பதும் வேறெங்கும் காணமுடியாத சிறப்பம்சமாகும்.

வைகானஸ சாஸ்திரப்படி இத்தீர்த்தம் கங்கைக்குச் சமமாக போற்றப்படுகிறது. இதில் நீராடினால் காசியில் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். சரீரநோய், மனப்பதற்றம், கவலை, கோபம் போன்றவை நீங்கும். ஒவ்வொரு திருவோண நட்சத்திர நாளிலும் ஆலயத்தோடு சேர்த்து இந்த தீர்த்தத்தையும் பக்தர்கள் வலம் வருகிறார்கள். தட்சிண அகோபிலம் என்றும் பாண்டிநாட்டு அகோபிலம் என்றும் பக்தர்களால் இக்கோயில் அழைக்கப்படுகிறது.  இங்கே கல்யாணத்தடை, கடன் தொல்லை, கோர்ட் வழக்கு, நீண்டநாள் நோய் ஆகியவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ளலாம்.

இது சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான தலமாகவும் விளங்குகிறது. காடு அல்லது மலைப்பகுதியற்ற சமதளமான இத்தலத்தில் பகவான் இறங்கி வந்து கோயில் கொண்டுள்ளார். எவ்வித சிரமம், பயம், தயக்கமும் இன்றி வருடத்தின் 365 நாட்களிலும் சிறியவர் முதல் வயதானவர் வரை நேரில் வந்து சுலபமாக நரசிம்மரை மிக அருகில் நின்று தரிசிக்கலாம். இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்த நரசிம்மரை சூரியனும் சந்திரனும் வெண்சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, சங்கு சக்ர தாரியாய் தலைக்குமேல் வெண்கொற்றக்குடையின் கீழ் கருங்கல் புடைப்புச் சிற்பமாக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.

பிரகலாதன், அவன் தாய், இரண்யகசிபுவின் தந்தையும் பிரகலாதனின் தாத்தாவுமான காஸ்யப மகரிஷி என குடும்ப சகிதமாய் நரசிம்மரை தஞ்சமடைந்து நிற்கும் காட்சியை இங்கு தரிசிக்கலாம். கைமேல் பலன் தரும், குழந்தை மனம் கொண்ட, கருணையே வடிவமான நரசிம்மரை இப்படியொரு அற்புதமானதும் அபூர்வமானதுமான தோற்றத்தில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலை 3.30 மணிக்கு 16 வகை மூலிகை களால் நரசிம்மரின் மூலமந்திரம் உச்சரிக்கப்பட்டு ஹோமம் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு சூக்தம், ஸ்ரீசூக்த ஹோமங்களும் நடைபெறுகின்றன. அடுத்து, நரசிம்மர் விசேஷ அபிஷேக ஆராதனைகளை மேற்கொள்கிறார். சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டால் கடன்கள் தீரும், செல்வச் செழிப்பு ஏற்படும், வியாபார அபிவிருத்தி உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்னைகள் நீங்கி நன்மை உண்டாகும் எனவும், பில்லி, சூன்யம், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

இத்தல நரசிம்மருக்கு நீராஞ்சனம் எனும் நெய்தீபம் ஏற்றி 16 முறை பிரதட்சிணம் வந்து வழிபட்டால் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுகின்றன. நரசிம்மர் ப்ரீதியாக பானகம் நிவேதனம் செய்து வழிபடலாம். நரசிம்ம வழிபாட்டிற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும். திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து மேற்கே 40 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாவூர் சத்திரம் எனும் ஊர். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் கீழப்பாவூர் அமைந்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி எண்: 9442330643.

 - கி.ஸ்ரீமுருகன்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts