background img

புதிய வரவு

முன்னோர்களின் ஆசி கிடைக்க மகாளய அமாவாசை விரதம்

சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை, குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம்.



இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது. ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமான அமாவாசை ஆகும். புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது.

நம் முன்னோர்களை நினைத்து வயதானவர்களுக்கும், ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர். மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும். மகாளய பட்ச அமாவாசை அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரைகளில் அல்லது வீட்டின் வடகிழக்கு கிணற்றின் அருகில் மூதாதயர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நமது சந்ததியர்களின் வளர்ச்சியும் இருக்கும்.

நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது. ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். முடிந்த அளவு இந்த அமாவாசையில் நீங்கள் உங்கள் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய்களில் இருந்து விடுவிக்கும்.

தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.

1. நம் பித்ருக்கள் (மண்),

2. புரூரவர் (நீர்),

3. விசுவதேவர் (நெருப்பு),

4. அஸீருத்வர் (காற்று),

5. ஆதித்யர் (ஆகாயம்)


என பஞ்ச பூத அம்ஸமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று.

காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்கள் திதி தர ஏற்ற இடங்கள். நம் தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பின்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.



மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான். இவர்கள் 'காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''.

இப் பூஜையால் தீராத கடன் ஒழியும், தீர்க்க முடியாத வியாதிகள் குறையும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும், உத்தி யோகம் கிடைக்கும், உத்யோக உயர்வுகள் உண்டாகும், திருமணத் தடை அகலும், இல்லறம் இனிக்கும், குழந்தைகள் கல்வியில் உயர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, குழந்தை பாக்யம், வியாபார அபிவிருத்தி, குடும்ப சாபம் அகலும், செவ்வினைகள் அன்டாது, கால்நடை பெருக்கம், விவசாய அபிவிருத்தி ஏற்படும், நிம்மதி நிலைக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts