background img

புதிய வரவு

நாகதோஷம் நீக்கும் வில்வாரண்யம்

வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில்

வில்லிவாக்கத்தில் பாலியம்மன் கோயில் அக்னிஷேத்திரமாக விளங்குகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏரிக்கரையில் அருகில் பெண் ஒருவர் வேம்பு  மரத்தடியில் நின்றுகொண்டு அந்த வழியாக போவோரைப்   பார்த்து ‘’என் உடல் எரிச்சலடைகிறது. ஏரியில் உள்ள நீரை எடுத்து அபிஷேகம் செய்யுங்கள்’’  என்று கூறினாள். அங்கிருந்த பெண்கள் ஏரியில் இருந்து தண்ணீரை குடத்தில் கொண்டுவந்து அபிஷேகம் செய்தனர். அப்போது மனம் மகிழ்ந்து  தெய்வகலையுடன் காட்சியளித்த அந்த பெண் சாந்தியடைந்தாள். இதை கண்டு கூடியிருந்த பெண்களின் மனம் நிம்மதியடைந்தது.

உடனே அந்த பெண் நான் இங்குள்ள மக்களுக்கு அருள் பாலிக்க வந்துள்ளேன், என்னை பாலியம்மன் என்று அழையுங்கள், நான் இளைப்பாறுவதற்கு இங்கேயே  கோயில் கட்டுங்கள், என்று கூறினாள். அப்போது ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி சிறியதாக கோயில் கட்டினர். மேலும், சுமார் 600 வருடங்களுக்கு முன்பு  நாடோடி இனத்தவர்கள் தன்னுடன் எடுத்துவரும் அம்மன் விக்கிரகத்தை சுமந்து வந்தபோது பாரம் தாங்காமல் தற்போது கோயில் உள்ள இடத்தில்  இறக்கிவைத்தனர்.



அதன் பிறகு அதை அகற்ற முடியாத்தால் பக்தர்கள் இன்று சேர்ந்து தெய்வமாக வணங்கி பாலியம்மனுக்கு கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. 1710ஆம்  ஆண்டு அம்மனுக்கு சிறிய அளவில் கருவறை கட்டப்பட்டு, 1938ஆம் ஆண்டு கருவறைக்கு முன்பு உள்ள முகப்பு மண்டபம் கட்டப்பட்டது. பாலீஸ்வரி,  பாலாம்பிகை, பாலியம்மன், என்ற பெயர்களில் அழைக்கப்படும் அன்னைக்கு பாலியம்மன் என்னும் பெயர் இங்கு மட்டுமே உள்ளது. கோயில் அமைப்பு:  கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் வலது பக்கம் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகப்பெரிய அரச மரம் உள்ளது.

மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்தால் மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகத்துடன் தேவி பாலியம்மன் காட்சியளிக்கிறாள். அம்மனின் முபுறம் கீழே தனியாக  கழுத்தம்மன் என்று அழைக்கப்படும் அம்மன் முகம் உள்ளது. தெற்கு திசையில் மகாலட்சுமியும், மேற்கில் மகேஸ்வரியும், வடக்கில் சரஸ்வதி, விஷ்ணு  துர்கையும், ஐயப்பனுக்கும், முருகன் , விநாயகர் என தனித்தனியாக கோயிலும், எதிரே நவக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் சிறப்பு:


அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கி, சந்தான செல்வத்துடன் சகல செல்வங்களும் பெற்று நோய்நொடியின்றி வாழ பலரும் இங்குவந்து  அபிஷேகம் செய்கின்றனர். மேலும், நாக தோஷம், சர்ப தோஷம், போன்றவற்றுக்கு இங்கு வந்து பூஜை செய்தால் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின்  நம்பிக்கையாக உள்ளது. தை, ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

விழாக்காலாம்:

கோயிலின் முக்கிய விழாவாக தீமிதி திருவிழா நடக்கிறது. சித்ரா பௌர்ணமி அன்று 1008 பால்குட ஊர்வலத்தில், அம்மன் வீதிஉலா நடக்கும். விநாயகர்  சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீப உற்சவம், தை பொங்கல் திருவிழா, சிவராத்திரி உற்சவம் நடைபெறும்.

எப்படி போகலாம்:

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

பூஜை நேரங்கள்:

கோயிலில் இரண்டு கால பூஜைகள் நடக்கிறது. தினசரி காலை 6 மணிமுதல் பகல் 11 மனிவரைக்கும், மாலை 5 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும்.  செவ்வாய் கிழமையில் மாலை 3 முதல் 9 வரையும், வெள்ளிக்கிழமையில் மாலை 5 முதல் 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts