background img

புதிய வரவு

"ஜன் லோக்பால்' விவாதிக்க பிரதமர் ஒப்புதல் : மக்கள் எழுச்சிக்கு முதல் வெற்றி

லோக்பால் விவகாரத்தில், மத்திய அரசு, சமரசத்துக்கு இறங்கி வந்துள்ளது. "நீங்கள் பரிந்துரைத்துள்ள ஜன்லோக்பால் மசோதாவை, உரிய நடைமுறைகளின்படி, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க தயார்' என, ஹசாரேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் இந்த சமரச நடவடிக்கை, நாடு முழுவதும் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.
ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் பலமான லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, கடந்த எட்டு நாட்களாக, உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் வரை, இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்தது. இதற்கிடையே, ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக, நாடு முழுவதும் மக்கள், எழுச்சியுடன் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு, தன் நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளது. நேற்று காலை, இந்த விவகாரத்தில் அதிரடியான திருப்பங்கள் ஏற்பட்டன. பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் அபிஷேக் சிங்வி, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோருடன், பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, சிதம்பரம் ஆகியோருடனும், ஆலோசனை நடத்தினார். "லோக்பால் விவகாரம் குறித்து விவாதிக்க, நாளை (இன்று) அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது' என, மத்திய அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே, ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன், அதிகாரப்பூர்வமற்ற வகையில், மத்திய அரசு சார்பில், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சு நடத்தினார். டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மகனும், காங்., எம்.பி.,யுமான சந்தீப் தீட்ஷித் வீட்டில், இச்சந்திப்பு நடந்தது.
இதற்கு பின், அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ""பேச்சு நடத்த வரும்படி, சல்மான் குர்ஷித் அழைப்பு விடுத்தார். அரசு சார்பில், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதியாக நியமிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்' என்றார்.

பிரதமர் கடிதம்: இதன்பின், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங்குடன், நேற்று மாலை பேச்சு நடத்தினார். உடனடியாக, உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறும்படி, அன்னா ஹசாரேவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: உங்கள் உடல் நிலை குறித்து வெளியாகும் தகவல் கவலை அளிக்கிறது. லோக்பால் மசோதா விவகாரத்தில், எங்கள் தரப்புக்கும், உங்கள் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில், எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. பலமான லோக்பால் மசோதாவை உருவாக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. லோக்பால் மசோதாவில் எந்த வகையான திருத்தம் செய்வதற்கும், பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அரசின் லோக்பால் மசோதா பரிசீலிக்கப்படுவது போல், உங்கள் தரப்பில் பரிந்துரைத்துள்ள ஜன்லோக்பால் மசோதா குறித்தும் பரிசீலிக்கப்படும். ஜன்லோக்பால் மசோதாவை, நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கும்படி, சபாநாயகர் மீரா குமாருக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். தற்போதைய சூழலில் உங்கள் உடல் நலன் மிகவும் முக்கியம். எனவே, என் கோரிக்கையை ஏற்று, உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவீர்கள் என, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமரசம்: பிரதமரின் இந்த கடிதம், இரு தரப்புக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது. இந்நிலையில், அரசு தரப்பு பிரதிநிதியான பிரணாப் முகர்ஜியுடன், ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண்பேடி ஆகியோர், நேற்று மாலை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஹசாரே, தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறக் கூடும்.
மத்திய அரசின் இந்த சமரச நடவடிக்கை, கடந்த ஏழு நாட்களாக, நாடு முழுவதும் காணப்பட்ட மக்களின் எழுச்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts