No conditions of the people are stretched out his hand to anyone. In my lifetime I have seen that the condition is not interested. Chief Minister Jayalalithaa in the Assembly Sentimental Talk
தமிழக மக்கள் யாரிடமும் கையை நீட்டி பெறுகின்ற நிலைமை இருக்ககூடாது. அந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. என் லட்சியமும் அதுதான் என் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக கூறினார்.
சட்டசபையில் அ.தி. மு.க. ஆட்சியின் 100 நாள் சாதனையை பாராட்டி பேசிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
தமிழக மக்களின் மகத்தான ஆதரவுடன் 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட அ.தி.மு.க. தலைமையிலான அரசு தன்னுடைய பணியில் 100 நாட்களை இன்று நிறைவு செய்ததையொட்டி இங்கே சட்டமன்ற கட்சி தலைவர்கள் பலரும் பேசி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இங்கு பேசிய உறுப்பினர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை பாராட்டுகளை கேட்கின்றபோது ஏதோ சம்பிரதாயத்துக்காக தெரிவிக்கப்பட்ட பாராட்டுகள் போல எனக்கு தோன்றவில்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய உள்ளத்தின் அடிதளத்தில் இருந்து வந்த உணர்வுகளை இங்கே வெளிப்படுத்தியதாக நான் கருதுகிறேன். இந்த பாராட்டுரைகளை எல்லாம் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சி என்பதை விட என்றுமே என் வாழ்க்கையில் தோன்றாத ஒரு அச்ச உணர்வு இப்போது தோன்றி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
100 நாட்கள் முடிந்த பின்னர் எங்கள் ஆட்சியின் பணியை இன்று ஒருவர் கூட குறை சொல்லாமல் இப்படி தாராளமனதோடு, முழுமனதோடு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்களே. இது தொடர்ந்து நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணும் போது ஒரு சிறிய அச்ச உணர்வு ஏற்படுகிறது.
இந்த 100 நாட்களுடன் எல்லாம் முடிந்து விடவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் நிறைவு செய்ய வேண்டும். அந்த 5 ஆண்டுகள் முடியும் வரையிலும் இந்த 100 நாட்கள் பணியை மிஞ்சுகின்ற அளவுக்கு எங்கள் அரசின் பணிகள் அமைய வேண்டுமே… இங்குள்ள உறுப்பினர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் தொடர்ந்து நம்மை வாழ்த்தி பாராட்ட வேண்டுமே… அதற்கேற்றார் போல் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டுமே.. என நினைக்கும் போது இது மிகப்பெரிய சவாலாகவே எனக்கு தோன்றுகிறது.
என்னை பொறுத்தவரை அனைவரது ஆதரவோடும் வாழ்த்துக்களோடும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். காரணம்- நாங்கள் எதை செய்தாலும் உள்ள சுத்தியுடன் செய்கிறோம். மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் கிஞ்சித்தும் இல்லை.
இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இன்று ஒரு உண்மையை நான் இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன். இது ஏற்கனவே எனக்கு தெரிந்த விவரமென்றாலும் அதை சொல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைய வில்லை. இன்று சொல்லி விடலாம் என்று எண்ணுகிறேன்.
கடந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் மலைபோல் நம்பி இருந்தது பண பலத்தைத் தான். ஆட்பலத்தை விட, படை பலத்தை விட, அதிகார பலத்தை விட அவர்கள் நம்பியிருந்தது பண பலத்தைத்தான்.
3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க.வினர் புழகத்தில் விட்ட பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.5 ஆயிரம் கோடி. அந்த தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் சில கடுமையான நடவடிக்கை எடுத்தது.
அப்போது இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தி.மு.க.வினரிடம் இருந்து ரூ.50 கோடி ஒட்டு மொத்தமாக கைப்பற்றப்பட்டது. இது எல்லா பத்திரிகைகளிலும் வெளியே வந்தது.
இந்த செய்தி வந்த போது முன்னாள் முதல்வர் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் இங்கே சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர். எனக்கு வேண்டியவரும் அவர்கள் அருகிலேயே இருந்தார். அவர் யாரென்று அவர்களுக்கு தெரியாது.
அப்போது ஒருவர் கேட்கிறார் எலக்ஷன் கமிஷன் பரவாயில்லையே. ரூ.50 கோடியை அவர்கள் கைப்பற்றி விட்டார்களே என்று சொல்கிறார். அதற்கு இன்னொருவர் சொல்கிறார்.. இந்த ரூ.50 கோடி என்பது எங்களுக்கு, அதாவது முன்னாள் முதல்வர் குடும்பத்திற்கு ஒரு பானை தண்ணீர் கொண்டு செல்லும் போது சிதறி சில துளிகள் விழுமே, அது போன்ற சிதறல்தான் என்றார்.
இந்த ரூ.50 கோடி வெறும் சிதறல், எங்களுக்கு இது பொருட்டே அல்ல. ஒட்டு மொத்தமாக எங்கள் அண்ணன், எந்த அண்ணன், அஞ்சாமல் இருந்து இன்று காணாமல் போன அண்ணன் புழக்கத்தில் விட்ட பணம் ரூ.5 ஆயிரம் கோடி என்று அவர்கள் அங்கே தெரிவித்தார்கள்.
இதை எதற்காகச் சொல்ல வருகிறேன் என்றால், அந்த ரூ. 50 கோடி புழக்கத்தில் விட்டு இவ்வளவு ஆசை காட்டி அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் அதற்கெல்லாம் மசியாமல் இடம் கொடுக்காமல் அதற்கு இளகிவிடாமல், மக்கள் உறுதியாக இருந்து, இவர்கள் எவ்வளவு பணத்தைக் கொட்டினாலும் சரி, எத்தனை பவுன் தங்கத்தை கொடுத்தாலும் சரி, எத்தனை சேலைகளைக் கொடுத்தாலும் சரி, என்ன கொடுத்தாலும் சரி அ.தி.மு.க. விற்கு வாக்களிப்போம். அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று ஒரு உறுதியுடன் இருந்து சாதித்துக் காட்டினார்கள்.
அதனால் தான் இன்று கொடுத்த விளம்பரங்களில் சொல்லியிருக்கிறோம். “மாற்றத்தைக் கொண்டு வந்த தமிழக மக்களுக்கு ஏற்றத்தை தருகின்ற அரசு என்று.
இங்கே பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் குறிபிட்டார்கள்.. இந்த அரசுக்கு, இந்த முதல்வருக்கு செய்ய வேண்டும் என்று மனம் இருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்தத்தில் அமைச்சர் பேசுகின்ற பேச்சுகளைப் பார்க்கும் போது, முதல்வர் சொல்லுகின்ற கருத்துக்களைப் பார்க்கும் போதும் நிதிப் பற்றாக்குறைதான் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை.
தமிழக மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. எங்கள் அரசுக்கு இருக்கிறது. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர் எப்படி தமிழக மக்களை கடனாளியாக்கி விட்டு சென்றார்கள் என்பதை இங்கே பேசிய அனைவரும் குறிப்பிட்டார்கள்.
மத்திய அரசும் நமக்குச் செய்ய வேண்டிய உதவிகளை செய்யாமல் எப்படி பாராமுகமாக இருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டார்கள். ஆனால் அத்தனையையும் மீறி நாங்கள் சாதிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான். ‘‘வருந்தாதே ஏழை மனமே.. வரும் காலம் நல்ல காலம். மனம் போல் இன்பம் நேரும் திருநாளும் வந்து சேரும். தினம் இரவு பகலும் மாறி வரும் முறையை எண்ணிப்பாரு’’ என்பதைச் சொல்லி, நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கிறது.
இன்று விலையில்லா அரிசி, இன்னும் கிரைண்டர், மிக்சி, விசிறி, போன்ற எத்தனையோ பொருட்களை மக்களுக்கு கொடுப்பதைப் பற்றி பலரும் குறிப்பிட்டார்கள். ஆடு மாடுகள் வழங்குவதைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டார்கள். அதற்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.
எனக்கு மனதில் இருக்கின்ற எண்ணம், ஆசை இதுதான். எல்லாமும் எல்லாரும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவியும் இலவசமாக தர வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது.
தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. அந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காண வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது.அதுதான் என்னுடைய லட்சியம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், நல்வாழ்த்துகளோடும் தமிழக மக்களின் அன்போடும், ஆதரவோடும் எனது லட்சியம் நிறைவேறியே தீரும் நிறைவேற்றியே தீருவோம் என்று சொல்லிக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
0 comments :
Post a Comment