ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 1 ஓட்டத்தில் அதிர்ச்சி தோல்வி
ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 153 ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 1 ஓட்டத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
ஐபிஎல் 5 தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் துடுப்பெடுத்தட முடிவு செய்தது.
அதன் பின் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்சின் தொடக்க வீரர் ஜெயவர்த்தனே 2வது ஓவரிலேயே 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பீட்டர்சனும் 5 ஓட்டங்களில் டிராவிடிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்கோரை, அணித்தலைவர் ஷேவாக் தூக்கி நிறுத்தினார்.
அதிரடியாக ஆடிய ஷேவாக் ஐபிஎல் 5 தொடரில் தனது 4வது அரைசதத்தை கடந்தார். அதன்பிறகும் அதிரடியை தொடர்ந்த ஷேவாக் 39 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ், 8 பவுண்டரிகள் அடித்து 63 ஓட்டங்களை குவித்து, மெனாரியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்த ரோஸ் டெய்லர் 25 ஓட்டங்கள் எடுத்து போல்டானார்.
அடுத்த வந்த நமன் ஓஜா அதிரடியாக 1 சிக்ஸ் அடித்து, அடுத்த பந்தில் டிராவிடிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் யோகேஷ் நகர் உடன் ஜோடி சேர்ந்த இர்பான் பதான் அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினார். யோகேஷ் நகர் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி பந்தில் இர்பான் பதான் ஒரு பவுண்டரி அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ஓட்டங்களை எடுத்தது.
153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்று களமிறங்கிய ராஜஸ்தான் றொயல்ஸ் அணி மந்தமாக தொடங்கினாலும், 5 ஓவர்களுக்கு பிறகு அதிரடிக்கு தாவியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் டிராவிட், ரஹானே ஜோடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். 13வது ஓவர் வரை விக்கெட் போகாமல் ஆடிய ராஜஸ்தான் றொயல்ஸ் 99வது ஓட்டத்தில் முதல் விக்கெட்டை இழந்தது.
அணித்தலைவர் ராகுல் டிராவிட் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகும் அதிரடியாக ஆடிய ரஹானே அரைசதம் கடந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிராட் ஹார்ஜ் 22 ஓட்டங்கள் எடுத்து எல்.பி.டபில்யூ ஆனார்.
கடைசி வரை ரஹானே களத்தில் நின்று அணியின் வெற்றிக்காக பாடுபட்டார். கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஓவைஸ் ஷா 1 சிக்ஸ் அடித்து நம்பிக்கை அளித்தார்.
ஆனால் கடைசி பந்தில் வெற்றிப் பெற 2 ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் பந்தை அடிக்க தவறிய ரஹானே ரன் ஓட, எதிர் முனைக்கு சென்ற ஓவைஸ் ஷா ஆட்டமிழந்தார்.
இதனால் கடைசி வரை களத்தில் நின்று போராடிய ரஹானே ஆட்டம் வீணாகி, ராஜஸ்தான் ராயல்ஸ் 1 ஓட்டத்தில் தோல்வியை தழுவியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹானே 63 பந்துகளில் 1 சிக்ஸ், 9 பவுண்டரிகள் அடித்து 84 ஓட்டங்கள் எடுத்தார்.
0 comments :
Post a Comment