ஐ.பி.எல் லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் 40வது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின.
சங்ககரா விலகிக் கொள்ள டெக்கான் அணியின் அணித்தலைவர்
பொறுப்பை கேமரான் ஒயிட் ஏற்றார். மும்பை அணியில் காயமடைந்த போலார்டு நீக்கப்பட்டு, ரிச்சர்ட் லீவி வாய்ப்பு பெற்றார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் ஹர்பஜன் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
டெக்கான் அணிக்கு பார்த்திவ் படேல், ஷிகர் தவான் சேர்ந்து நல்ல தொடக்கம் தந்தனர். ஆர்.பி.சிங் பந்தில் பார்த்திவ் ஒரு சிக்சர் அடித்தார். மலிங்கா பந்தில் தவான் ஒரு பவுண்டரி விளாசினார்.
மீண்டும் பந்துவீச வந்த ஆர்.பி.சிங் இம்முறை பார்த்திவை(19) வெளியேற்றினார். இதற்கு பின் வந்தவர்கள் சரியாக விளையாடவில்லை. ஆடுகளமும் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க, மும்பை வீரர்கள் பட்டையை கிளப்பினர்.
ஹர்பஜன் சுழலில் ஜாகி(2) சிக்கினார். மலிங்கா பந்தில் கேமரான் ஒயிட் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அசத்திய ஹர்பஜன் வலையில் தவானும்(29) வீழ்ந்தார். பிராங்க்ளின் வீசிய போட்டியின் 13வது ஓவரில் கிறிஸ்டியன்(5), சிப்லி(1) நடையை கட்டினர்.
முடிவில் டெக்கான் அணி 18.4 ஓவரில் 100 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
எளிதான எட்டக் கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணி திணறல் தொடக்கம் கண்டது. முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றினர். ஸ்டைன் வீசிய முதல் பந்தில் லீவி(0) போல்டானார்.
பிரதாப் சிங் வேகத்தில் சச்சின்(14) ஆட்டமிழந்தார். தொடர்ந்து மிரட்டிய ஸ்டைன் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கும்(2) ஆட்டமிழக்க, 8.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 45 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது.
பின் ரோகித் சர்மா, பிராங்க்ளின் இணைந்து போராடினர்.
பொறுப்பாக விளையாடிய ரோகித் சர்மா 42 ஓட்டங்களுக்கு(4 பவுண்டரி, 1 சிக்சர்), டுமினி பந்தில் வெளியேறினார். சிறிது நேரத்தில் பிராங்க்ளினும்(13) ஆட்டமிழக்க, டென்ஷன் ஏற்பட்டது.
ஆனால் அமித் மிஸ்ரா வீசிய போட்டியின் 18வது ஓவரில் அம்பதி ராயுடு இரண்டு பவுண்டரி அடிக்க, பதட்டம் தணிந்தது. மும்பை அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 101 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை டெக்கான் வீரர் ஸ்டைன் வென்றார்.
0 comments :
Post a Comment