நடிகை ஸ்ரேயாவுக்கு திருமண ஏற்பாடு நடப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது உண்மைதான் என ஒப்புக் கொண்டார். ஸ்ரேயா அளித்த பேட்டி வருமாறு:-
நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அது அது அந்தந்த வயதில் நடக்க வேண்டும். பெற்றோருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே நான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன்.
பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையே திருமணம் செய்து கொள்வேன்.
திருமணத்துக்கு நான் சம்மதித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவக்கூடும்.
சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இதனை புரிந்து கொள்ளவேண்டும். மனதுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதலிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அப்படி யாரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை.
எனவேதான் பெற்றோர் பார்க்கிறார்கள்.
எனக்கு கணவராக வருபவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். சினிமாவை பற்றி நன்றாக புரிந்து தெளிவடைந்தவராக இருக்க வேண்டும். எனக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
திருமணத்துக்கு பிறகு நிறைய பேர் விவாகரத்து செய்து பிரிகிறார்கள். அப்படி விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. திருமணத்துக்கு முன்பு கணவராக வரப்போகிறவர் எப்படிப்பட்டவர் என்று முழுமையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவரது குணநலன், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறகு கழுத்தை நீட்ட வேண்டும். திருமணமானபின் எக்காரணத்தை கொண்டும் விவாகரத்து செய்யக்கூடாது.
0 comments :
Post a Comment