அஸ்லான் ஷா ஹொக்கி தொடரின் பரபரப்பான லீக் போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி பெற்றது.
மலேசியாவில் உள்ள இபோ நகரில், 21வது சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹொக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மலேசியா, தென் கொரியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட ஏழு அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இப்போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
30வது நிமிடத்தில் கிடைத்த “பெனால்டி கார்னர்” வாய்ப்பை இந்தியாவின் சந்தீப் சிங் கோலாக மாற்றினார். இதற்கு பாகிஸ்தான் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் பாகிஸ்தான் அணியின் கோலடிக்கும் முயற்சியை இந்திய கோல் கீப்பர் பாரத் செத்ரி அருமையாக தடுத்தார். தொடர்ந்து போராடிய பாகிஸ்தான் அணிக்கு 59வது நிமிடத்தில் கிடைத்த “பெனால்டி கார்னர்” வாய்ப்பை சோகைல் அபாஸ் கோலாக மாற்ற போட்டி 1-1 என்று சமநிலை அடைந்தது.
கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்ட இந்திய அணியின் சுனில், 69வது நிமிடத்தில் ஒரு சூப்பர் கோல் அடித்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது. ஆறு போட்டிகளின் முடிவில் 9 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி, மற்ற போட்டிகளின் முடிவைப் பொறுத்து 3 அல்லது 4வது இடம் பிடிக்கலாம்.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இதன்மூலம் 5 போட்டியில் 12 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து அணி, முதன்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இங்கிலாந்து, தென் கொரியா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.
அஸ்லான் ஷா கிண்ண இறுதிச் சுற்றில் விளையாட இந்தியாவுக்கு லேசான வாய்ப்பு உள்ளது. இதற்கு, நாளை நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து அணி (8 புள்ளி), பாகிஸ்தானிடம் (3 புள்ளி) தோற்க வேண்டும்.
மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா அணி (9 புள்ளி), மலேசியாவிடம் (5 புள்ளி) அதிக கோல் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்திக்க வேண்டும். ஆனால் நல்ல பார்மில் உள்ள அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் எளிதில் விட்டுக் கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment