background img

புதிய வரவு

பெட்ரோல் விலை உயர்வு கண்துடைப்பு நாடகம் : ஜெயலலிதா

பெட்ரோல் விலையை 2 ரூபாய் மட்டுமே குறைத்துள்ளது மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நடுத்தர மற்றும் ஏழை மக்களை பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வை முற்றிலுமாக திரும்ப பெறவேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை கடந்த வாரம் லிட்டருக்கு 7ரூபாய் 50 பைசா அளவிற்கு உயர்த்தின. இந்தியா முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கடந்த 30ம் தேதி எதிர்கட்சிகள் நாடு தழுவிய பந்த் நடத்தின. இதனை அடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 23-ந் தேதி நள்ளிரவு முதல் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்று உயர்த்தி மக்கள் மீது தாங்கொணா சுமையை ஏற்றியது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக விலைவாசி ஏறிவரும் நிலையில் மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் இந்த பெட்ரோல் விலை உயர்வு உள்ளது என்பதை அன்றே நான் சுட்டிக்காட்டி, எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன்.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயல் காரணமாக ஏழை எளிய, நடுத்தர மக்களின் மாதவருமானத்தில் பெருமளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதையும், மக்களின் வாங்கும் சக்தி மற்றும் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சி அடையும் என்பதையும் சுட்டிக்காட்டி, பெட்ரோலுக்கான இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தேன்.

அ.தி.மு.க சார்பில் இந்தப் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, மாவட்டந்தோறும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு அமைப்புகளும், பலதரப்பட்ட மக்களும் இந்த விலை உயர்வுக்கு நாள்தோறும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் 2 ரூபாயை இன்று நள்ளிரவு முதல் குறைத்துள்ளது.

இந்த விலைக் குறைப்பு ``யானைப் பசிக்கு சோளப்பொறி'' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

உயர்த்தப்பட்ட 7 ரூபாய் 50 பைசாவில் 2 ரூபாய் குறைப்பு என்பது ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது. இந்த சிறிய அளவிலான விலை குறைப்பு மக்களின் கோபத்தை எந்தவிதத்திலும் தணித்துவிடாது. இதற்குப் பின்னும், பெட்ரோல் விலை ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு சுமையானதாகவே இருக்கும். எனவே, இத்தகைய விலை குறைப்பு என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றாமல், ஏற்றப்பட்ட பெட்ரோல் விலையை முழுவதும் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts