background img

புதிய வரவு

கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி - பெட்ரோல் விலை ரூ 2 குறைய வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால், வேறு வழியின்றி பெட்ரோல் விலையில் ரூ 2 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும், 1-ந்தேதி மற்றும் 16-ந்தேதி பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.

பொதுவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1 டாலர் உயர்ந்தாலும், உடனே விலையை ஏற்றிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

ஆனால் இந்த முறை கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தும்கூட, நஷ்டம் என்று கூறி லிட்டருக்கு ரூ 7.50 உயர்த்தி பொதுமக்களை அலற வைத்தன.

இதற்கு எதிர்ப்பும் நாடெங்கும் கண்டனப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணை நேற்று 111 டாலரில் இருந்து 106 டாலராக குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் கூட குறைய வாய்ப்புள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ரூபாய் மதிப்பில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை. இதன் காரணமாக கடந்த வாரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை சற்று குறைக்க இந்திய எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரை குறைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று அல்லது நாளை இதுபற்றி ஆலோசித்து விலை குறைப்பு முடிவை அறிவிப்பார்கள்.

எண்ணை நிறுவனங்களின் அறிவிப்பு இன்றிரவு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் பெட்ரோல் விலை குறைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வரலாம்.

இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவன தலைவர் ஆர்கே சிங் கூறுகையில், 'பெட்ரோல் விலை ரூ 1.50 வரை குறைக்கப்படலாம். அதற்கான சாத்தியம் உள்ளது,' என்றார்.

இதற்கான நடவடிக்கைகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வேகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களை சற்று தணிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts