background img

புதிய வரவு

ஆப்கானிஸ்தானில் ஓபாமா ரகசிய பயணம்: பல இடங்களில் குண்டு வெடிப்பு


Obama
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ரகசியமாக நேற்றிரவு ஆப்கானிஸ்தான் வந்தார்.
இந் நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றுள்ளது.
இன்று அதிகாலை காபூல் வந்த ஒபாமா அங்கு பக்ராம் விமானப் படை மையத்தில் வீரர்களை சந்தித்தார். பின்னர் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
பின்னர் அங்கிருந்தபடியே அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஒபாமா, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு எதிரான நிலை திசை திருப்பப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அல் கொய்தாவையும் தலிபான்களையும் எதிர்த்து போரிட்டு வந்தோம். இதில் கடந்த 3 ஆண்டுகளில் அவர்களை தோற்கடித்துக் காட்டியுள்ளோம். மேலும் அந்த அமைப்பு மீண்டும் உருவெடுக்காமல் தடுப்பதிலும் விரைவில் முழு வெற்றியை ஈட்டவுள்ளோம். ஆனால், அது மிக சவாலான பணியாகவே இருக்கும்.
அல் கொய்தா மற்றும் தலிபானைச் சேர்ந்த 30 மிக முக்கிய தலைவர்களில் 20 பேரை காலி செய்துவிட்டோம். இந்தப் போர் நாம் நினைத்ததை விட நீண்ட காலம் தொடர்ந்துவிட்டது. விரைவில் இந்த நாட்டின் முழுப் பாதுகாப்பையும் ஆப்கானிஸ்தான் படைகளே மேற்கொள்ளவுள்ளன. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் நேடோ நாடுகளும் செய்யும்.
ஆனால், இந்த நாட்டில் நிரந்தர பாதுகாப்பு முகாம்களை அமைக்க மாட்டோம். இந்த நாட்டின் மலைகளையும் சமவெளிகளையும் இனி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆப்கானிஸ்தான் மக்களுடையது.
போர் மூலம் மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தை மூலமும் தீவிரவாதத்தை ஒழிக்க நான் முயற்சி மேற்கொண்டுள்ளேன். தலிபான்களுடன் நேரடியாக பேச்சு நடத்தியுள்ளோம். அல் கொய்தாவுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறியுள்ளோம். பல தலிபான் தலைவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டுவிட்டனர். இந்த அமைதிக் கரத்தை கைப்பற்றாத தலிபான்கள் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்றார் ஒபாமா.
ஒபாமா இந்த உரையை ஆற்றிவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் காபூலில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014ம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான நேடோ படைகள் முழுவதும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டுக்குள் நாட்டின் முழுப் பாதுகாப்பும் ஆப்கானிஸ்தான் படைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts