background img

புதிய வரவு

சென்னையில் நான்கு வழித் தடங்களில் மோனோ ரயில் திட்டம்: சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னையில் நான்கு வழித் தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், குறைந்த பயண நேரத்தில் விபத்தில்லாத பாதுகாப்பான போக்குவரத்து வசதி அளிக்கவும் `மோனோ ரயில்' அதிவிரைவு போக்குவரத்து திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி 4 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1. வண்டலூரில் இருந்து வேளச்சேரி வரை பெருங்களத்தூர், இரும்புலியூர் (கிழக்கு), தாம்பரம் (கிழக்கு), கேம்ப் ரோடு, காமராஜர் நகர், செம்பாக்கம், கவுரிவாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், காமாட்சி மருத்துவமனை, மடிப்பாக்கம் கூட்டுரோடு ஆகிய இடங்கள் வழியாக 23 கிலோ மீட்டர் தொலைவிற்கும்,

2. பூந்தமல்லியில் இருந்து கத்திப்பாரா சந்திப்பு வரை குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர், முகலிவாக்கம் சந்திப்பு, ராமாவரம், நந்தம்பாக்கம் பட்ரோடு ஆகிய இடங்கள் வழியாக 16 கிலோ மீட்டர் தூரத்திற்கும்,

3. பூந்தமல்லியில் இருந்து வடபழனி சந்திப்பு வரை குமணன்சாவடி, கரையான்சாவடி, சவீதா பல்மருத்துவக் கல்லூரி, வேலப்பன் சாவடி, மதுரவாயல், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய இடங்கள் வழியாக 18 கிலோ மீட்டர் தூரத்திற்கும்,

4. வண்டலூரில் இருந்து புழல் வரை பெருங்களத்தூர், இரும்புலியூர், தாம்பரம், சென்னை ஏற்றுமதி வர்த்தக மண்டலம் (மெப்ஸ்), குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், ஆண்டாள்குப்பம், குன்றத்தூர், கொல்லசேரி, மாங்காடு, குமணன்சாவடி, கரையான்சாவடி, மேல்பாக்கம், பருத்திப்பட்டு, கோவர்த்தனகிரி, ஆவடி மார்க்கெட், ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர் (ஓ.டி) புதூர், கள்ளிக்குப்பம், சூரப்பேட்டை, புழல், கதிர்வேடு ஆகிய இடங்கள் வழியாக 54 கிலோ மீட்டர் தொலைவிற்கும் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதில் முதல்கட்டமாக 3 வழித்தடப் பணிகளும், இரண்டாவது கட்டமாக 4-வது வழித்தட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மோனோ ரயில் பாதை மேம்பால தூண்கள் ஒரு சதுர மீட்டருக்கு குறைவான சுற்றளவு கொண்டவையாக இருக்கும் என்பதால், சாலையின் நடுவே மிகக் குறைந்த நீளமே தேவைப்படும். தூண்கள் சாலையின் நடுவே மிக எளிதாகவும், விரைவாகவும் அமைத்து கட்டுமானப் பணிகள் செய்யப்படுவதால் மக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி மோனோ ரயில் திட்டம் மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி பார்வைக்கு அழகாகவும், சுற்றுப்புறச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்கும்.

மேலும் இந்தத் திட்டத்தால் தமிழக அரசுக்கு எந்தவித நிதிச் சுமையும் ஏற்படாத வகையில், வடிவமைத்தல், நிறைவேற்றுதல், நிதித் திரட்டுதல், இயக்குதல், பராமரித்து ஒப்படைத்தல் என்ற முறையில் (Design, Build, Fund, Operate and Transfer-DBFOT) தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு மோனோ ரயில் சரிவராது:

ஆனால், சென்னை போன்ற போக்குவரத்து மிக மிக அதிகம் உள்ள பெருநகருக்கு மோனோ ரயில் திட்டம் ஒத்து வராது என்று டெல்லி மற்றும் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்திய பிரபல போக்குவரத்துக் கட்டுமானப் பொறியாளர் ஸ்ரீதரன் பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு இப்போது அமல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விட்டுவிட்டு, மோனோ ரயில் திட்டத்தை ஜெயலலிதா அரசு வேகவேகமாக செயல்படுத்துவது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இது மெட்ரோ ரயில் திட்டத்தை விட 50 சதவீதம் அதிக செலவு பிடிப்பதாகும், மேலும் மெட்ரோ ரயிலோடு ஒப்பிடுகையில், மோனோ ரயிலில் 4ல் ஒரு பங்கு பயணிகள் தான் பயணிக்க முடியும் என்றும் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

மேனோ ரயிலால் யாருக்கு லாபமோ தெரியவில்லை, ஆனால் மக்களுக்கு லாபமில்லை என்கிறார்கள் பெருநகரத் திட்ட வல்லுனர்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts