ஐ.பி.எல் லீக் போட்டியில் காம்பிர் தலைமையிலான கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது. சொந்த மண்ணில் வீழ்ந்த ஷேவாக்கின் டெல்லி அணி, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
டெல்லியில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல் தொடரின் 51வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டெல்லி அணியில் கெவின் பீட்டர்சன், பவன் நேகிக்கு பதிலாக டேவிட் வார்னர், வருண் ஆரோன் வாய்ப்பு பெற்றனர். கொல்கத்தா அணியில் லாங்கே, இக்பால் அப்துல்லா நீக்கப்பட்டு, பிரட் லீ, பிரதீப் சங்வான் இடம் பெற்றனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணியின் தலைவர் ஷேவாக் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
டெல்லி அணிக்கு ஷேவாக், வார்னர் சேர்ந்து நல்ல துவக்கம் தந்தனர். பிரட் லீ வீசிய முதல் ஓவரில் வார்னர் திணற, மெய்டனாக அமைந்தது. மறுபக்கம் வழக்கம் போல் அதிரடி காட்டிய ஷேவாக், சங்வான் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மீண்டும் பந்துவீச வந்த பிரட் லீ ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து பதிலடி கொடுத்தார் வார்னர்.
இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். முதலில் ஷேவாக்கை(23) வெளியேற்றினார். அடுத்த ஓவரில் வார்னரையும்(21) பெவிலியனுக்கு அனுப்பினார்.
இதே ஓவரில் ஜெயவர்தனாவும் ஆட்டமிழந்ததாக எதிர் அணியினர் தெரிவித்தனர். பந்தை பிடித்த, விக்கெட் கீப்பர் பிரண்டன் மெக்கலம் உள்ளிட்ட கொல்கத்தா வீரர்கள் அப்பீல் செய்தனர்.
ஆனால், அம்பயர் நிராகரிக்க, கண்டம் தப்பினார். இது தொடர்பாக கொல்கத்தா அணித்தலைவர் காம்பிர், ஜெயவர்தனா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் பாட்யா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார் ஜெயவர்தனா.
பொறுப்பாக விளையாடிய ஜெயவர்தனா(30), காம்பிரின் நேரடி த்ரோவில் ஆட்டமிழக்க, டெல்லி அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. படுமந்தமாக ஆடிய ராஸ் டெய்லரும்(16 ரன், 27 பந்து) வெளியேற, 14.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்து தவித்தது. பிரட் லீ பந்தில் யோகேஷ்(10) போல்டாக, வேகம் அப்படியே குறைந்தது.
கடைசி கட்டத்தில் இர்பான் பதான் போராடினார். பிரட் லீ வேகத்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து நரைன் சுழலில் சிக்சர் விளாசினார். இவர் 36 ஓட்டங்களுக்கு நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் நமன் ஓஜா(2) வெளியேறினார். டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.
சுலப இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு காம்பிர், பிரண்டன் மெக்கலம் சேர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இர்பான் வீசிய முதல் ஓவரிலேயே மெக்கலம் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார்.
நதீம் சுழலில் காம்பிர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஆரோன் பந்தில் காம்பிர் கொடுத்த கேட்ச்சை உமேஷ் நழுவவிட்டார். இதை பயன்படுத்திக் கொள்ளாத காம்பிர்(36) அடுத்த பந்தில் போல்டானார்.
பின் காலிஸ், மெக்கலம் சேர்ந்து கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்பாக ஆடிய மெக்கலம் இத்தொடரில் தனது முதல் அரைசதம் எட்டினார். உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் 16வது ஓவரில் காலிஸ்(30), மெக்கலம்(56) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து மனோஜ் திவாரியும்(8) வெளியேற, லேசான பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும் குறைவான இலக்கு என்பதால் பிரச்னை ஏற்படவில்லை.
யூசுப் பதான்(7*), தேபபிரதா தாஸ்(1*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் எடுத்து, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது. தவிர, முந்தைய போட்டியில் டெல்லியிடம் சந்தித்த தோல்விக்கும் பழிதீர்த்தது. ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.
0 comments :
Post a Comment