background img

புதிய வரவு

அட்சய திருதியன்று வழிபடும் கோவில்கள்

அட்சய திருதியை அன்று குபேரர் கோவிலை வழிபட்டால் சலக செல்வங்களும் பெருகும். இக்கோவில் சென்னை அருகே வண்டலுர் அடுத்த ரத்னமங்கலத்தில் உள்ளது. இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு என்று தனியாக உள்ள ஒரே கோவில் என்ற பெருமையை இக்கோவில் பெற்றுள்ளது.

இக்கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளன. கோசாலையும் உள்ளது. செல்வத்துக்கு அதிபதி லட்சுமி. அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன். இவ்விருவரையும் இணைத்து லட்சுமி குபேர பூஜை செய்து வர நிலையான செல்வம் உண்டாகும்.

இழந்த செல்வத்தையும் பெற்று புகழோடு வாழலாம். ரத்னமங்கலம் குபேரரையும் லட்சுமியையும் ஒருசேர ஒருமுறை தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை. திருப்பதி செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரனை வழிபட்டுச் செல்வது மிகவும் விசேஷமானதாகும்.

வளமான வாழ்வுக்காக இங்கு லட்சுமி குபேர பூஜை செய்வது விசேஷம். இந்த பூஜையை பவுர்ணமி மற்றும் அமாவாசையில் செய்வது மிகுந்த பலன் தரும். குபேரன் காட்சி தரும் கோலமே பெரும் பரவசத்தை ஏற்படுத்தும். சிரித்த முகம், இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் தரும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.

கோவில் வரலாறு:

பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும் திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இந்த விஸ்வாராவின் மகனே குபேரன். இவரது மாற்றாந்தாய்க்கு பிறந்தவனே ராவணன். முதலில் இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. அவரிடம் இருந்து ராவணன் ஆட்சியைக் கைப்பற்றி விட்டான்.

குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். குபேரனை ராவணன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது என்றும், கூறுவதுண்டு. குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர். குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார்.

அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். சிவனுடன் அழகே வடிவான பார்வதியைக் கண்ட குபேரன், ஆஹா இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லை என்று எண்ணினான். இந்த நினைப்பில் குபேரனின் ஒரு கண் துடித்து அடங்கியது. இதைப் பார்த்து பார்வதி மிகவும் ஆத்திரமடைந்து, குபேரனின் துடித்த கண்ணை வெடிக்கச் செய்தாள்.

குபேரனுக்கு ஒரு கண் போய் விட்டது. பின், அவர் மன்னிப்பு கேட்க, பார்வதியும் பெருந்தன்மையுடன் குபேரனை மன்னித்தாள். ஆனால், போன கண் போனது தான் என்றாலும் அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை குபேரனுக்கு தோன்றும்படி செய்தார் சிவபெருமான். அத்துடன் குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார்.

அதன்பின், லட்சுமிதேவி குபேரனை தன தானிய அதிபதியாக்கினாள். அதாவது பணத்துக்கும், தானியத்துக்கும் அவர் சொந்தக்காரர் அல்ல, அவற்றை கண்காணிப்பது மட்டுமே அவர் பொறுப்பு. கொடுப்பது அன்னை லட்சுமி.

அட்சய திருதி விழா:

ரத்ன மங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் கோவிலில் அட்சய திருதியையொட்டி நாளை (6-ந்தேதி) சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று சுக்ர ஓரை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன், கோ பூஜை செய்து சுக்ரனின் அதிதேவதையான குபேர லட்சுமி ஆராதனையும் அதை தொடர்ந்து மகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகமும், ஸ்ரீசுத்தம் மற்றும் லட்சுமி அஷ்டகம் படித்து அன்று நாள் முழுவதும் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்லோகம் படித்து பக்தர்கள் பூஜை செய்வார்கள்.

அவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன நாணயங்களும், பச்சை நிற குங்குமத்துடன் கூடிய அட்சய திருதியை சிறப்பு பிரசாதமான ஹரி பலம் என்று அழைக்கப்படும் நெல்லிக்கனி அனை வருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்கள் தங்கள் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை குபேர லட்சுமியிடம் வைத்தும் அட்சய திருதியை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ஆசி பெறலாம்.

அட்சய புரீஸ்வரர் கோவில்:

அட்சய திருதியை அன்று அட்சயபுரீஸ்வரர் கோவிலில் வழிபட்டால் காரிய தடைகள் நீங்கி சகல யோகங்கள் பெறலாம். இக்கோவில் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து தெற்கே 30 கி.மீ. தொலைவில் விளங்குளம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. பேராவூரணியிலிருந்து நகரப் பேருந்திலும் இந்தத் திருக்கோவிலுக்கு செல்லலாம்.

கல்வெட்டு ஆராய்ச்சிகளின்படி, இத்திருக்கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஈசன் திருநாமம்- ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர். புராணங்களின்படி சூரிய பகவானின் மகன் சனி பகவானுக்கும் இன்னொரு மகன் எமதர்மனுக்கும் பகை இருந்து வந்தது.

அந்தப் பகை காரணமாக ஒரு முறை சனி பகவானின் காலில் எமதர்சனம் ஓங்கி அடிக்க... சனி பகவானுக்கு ஊனம் ஏற்பட்டது. கால் ஊனத்துடன் விமோசனம் தேடி மானுட ரூபத்தில் பூலோகத்தில் பல திருத்தலங்களுக்கும் அலைந்தார். அப்போது விளாமரங்கள் அடர்ந்த (விளங்குளம்) பகுதிக்கு வந்தபோது, பரந்து விரிந்து தரையில் காணப்பட்ட ஒரு விளாமரத்தின் வேர் தடுக்கி, அருகில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டார் சனி பகவான்.

அட்சய திருதியை நாளில்:

அந்த நாள் திருதியையும் பூச நட்சத்திரமும் சனி வாரமும் சேர்ந்த புனித நன்னாள். சனி விழுந்த அந்த நேரத்தில், பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் சுரந்து, சனி பகவானை மேலெழுப்பி கரை சேர்த்தது. இந்நிகழ்வில், சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தி ஆகி விட்டது.

மேலும் விளா வேர் தடுத்து விழுந்து சுரந்த குளமானதால், விளம்குளம் என்றழைக்கப்பட்டு, பின்னர் இந்தக் கிராமம் விளங்குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருக்கோவிலில் விஜய விநாயகர் மேற்கு முகமாக இருந்து அரள்பாலிக்கிறார். அட்சயபுரீஸ்வரர் சனிக்குக் காட்சி அளித்து, இந்த தலத்தில் திருமணப் பிராப்தியையும் அவருக்குத் தந்தார்.

பின்னர் குறைவில்லாத செல்வத்தை அள்ளித்தரும் அட்சயபுரீஸ்வரராக இங்கு நிலை கொண்டார். இறைவன் இங்கே, அருவுருவமாக லிங்க வடிவில் அருள்புரிகிறார். அம்பாளுக்கு, அபிவிருத்தி நாயகி எனும் திருநாமம் வழங்கப்பெறுகிறது. தவிர ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீநாகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீபைரவர், ஸ்ரீகஜலட்சுமி உள்பட பல தெய்வங்களுக்கும் சந்நிதி உண்டு.

திருமண தடை நீங்கும்:

சனி கால் ஊனம் நீங்கி மந்தா, ஜேஷ்டா எனும் இரு பத்தினியரை மணம் செய்து கொண்டு ஆதி பிருஹத் சனீஸ்வரராக, திருமணக் கோலத்தில் இங்கே அருள்பாலித்து வருகிறார். இங்கு அமைந்துள்ள பூச ஞான வாவி தீர்த்தத்தில் பூச நட்சத்திரம், திருதியை, சனிக்கிழமை ஆகிய ஏதாவது ஒரு நாளில் நீராடி வழிபட்டால், உடல் வகை துன்பங்களும், நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களும் நிவர்த்தியாகும்.

திருமணத் தடைகளும் விலகும். சனி பகவானின் நட்சத்திரம் பூசம். பூச மருங்கர் எனும் சித்தர், சனிப்பரணி சித்திரை சத்குருவாக கொண்டவர். பூசமருங்க சித்தர் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் வழிபடும் தலம் விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.

வழிபடுவது எப்படி?

அட்சய திரிதியை அன்று விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம் சென்று சிறப்பு வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மூல மூர்த்தி சிவலிங்கத்துக்கு, சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபட வேண்டும். பின், ஸ்ரீசனீஸ்வரமூர்த்திக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பிட்டு, அதில் எள், அரிசி, கோதுமை, பாதாம் பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து பூஜிக்க வேண்டும்.

இதனால், சந்ததிகள் உணவுப் பஞ்சம் இல்லாமல் நல்வாழ்வு வாழ்வார்கள். பெண் பிள்ளைகள் புகுந்த வீட்டில் துன்பமில்லாமல் வாழ்வர். அட்சய திருதியை அன்று குறைந்தது ஒரு வார காலத்துக்கு தேவையான உணவுப் பண்டங்களை தானமாக அளிக்க வேண்டும். இது நவக்கிரகங்களின் அனுக்கிரக சக்திகளைப் பெருக்கிடும். அருள் பெருகும் என்கிறார் ஜோதிடர் சதீஷ்குமார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts