background img

புதிய வரவு

டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு விசாரணை தொடங்கியது; ராசாத்தி அம்மாள் பேரனுடன் வந்தார்

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டு அவர்களது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால், அவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 10 நாட்களாக கனிமொழியும், சரத்குமாரும் ஜெயிலில் இருந்து வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவரும் கடந்த 23-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தனர். கனிமொழி தனது மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை.

கலைஞர் டி.வி.யில் நான் வெறும் பங்குதாரர்தான் எனக்கு பண பரிவர்த்தனையில் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

கனிமொழி மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்ட நீதிபதி பரிகோகே, அடுத்த விசாரணை 30-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி டெல்லி ஐகோர்ட்டில் இன்று கனிமொழி, சரத்குமார் ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் திகார் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது கனிமொழியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். அவர் தன்னுடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவை அழைத்து வந்திருந்தார். கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுடன் கனிமொழி பேசிக்கொண்டிருந்தார். நீதிபதி பரிகோகே முன்னிலையில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மதியம் 2 மணி முதல் நடந்தது.

கனிமொழி சார்பில் ஆஜரான வக்கீல் மனுவில் கூறி இருப்பதை வலியுறுத்தினார். இதையடுத்து சி.பி.ஐ. சார்பில் வக்கீல் ஆஜராகி வாதாடுகிறார். கனிமொழி, சரத்குமார் இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்று பிற்பகல் தெரியவரும். கரீம் மொரனிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதும் இன்று தெரியும். டெல்லி ஐகோர்ட்டு வளா கத்தில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்தது.

இதனால் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு தொடர்பு இல்லாத யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அதிகாரி அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts