background img

புதிய வரவு

பைனலுக்கு முன்னேறுமா சென்னை கிங்ஸ்? * இன்று பெங்களூரு அணியுடன் மோதல்

மும்பை: ஐ.பி.எல்., "பிளே ஆப்' சுற்று முதல் போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லலாம் என்பதால், இரு அணிகளும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளன.
இந்தியாவில் நடக்கும் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து இன்று, "பிளே ஆப்' சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
எழுச்சி தேவை:
லீக் சுற்று போட்டிகளில் 9 வெற்றிகள் பெற்ற சென்னை அணி, கடைசி போட்டியில் பெங்களூருவுடன் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதற்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் தான் முக்கிய காரணம். துவக்க வீரர்கள் மைக்கேல் ஹசி (429 ரன்கள்), முரளி விஜய் (334), ரெய்னா (357), பத்ரிநாத் (362) மற்றும் சகா ஆகியோர், கடந்த போட்டியைப் போல அல்லாமல், இன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இக்கட்டான நேரங்களில் அணிக்கு கைகொடுக்கும் கேப்டன் தோனி (341), மறுபடியும் ரன்குவிப்புக்கு உதவுவது நிர்வாகத்துக்கு ஆறுதல் தான். நேற்று முன்தினம் 40 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த இவர், இன்றும் அதை தொடர முயற்சிக்கலாம்.
ஆறுதல் கிடைக்குமா:
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சில், இதுவரை தலா 15 விக்கெட் வீழ்த்திய போலிஞ்சர், ஆல்பி மார்கல் இருவரும் மீண்டும் சரியான பாதைக்கு திரும்பினால் நல்லது. சுழற்பந்து வீச்சில் தமிழகத்தின் அஷ்வின் (16 விக்.,) இன்றைய போட்டியில் மீண்டும் ஜொலித்தால் பெங்களூரு அணியின் ரன்குவிப்புக்கு அணையிடலாம்.
கெய்ல் மிரட்டல்:
துவக்கத்தில் தோல்விகளால் துவண்டு கிடந்தது பெங்களூரு அணி. கிறிஸ் கெய்லின் வருகைக்குப் பின் திடீரென எழுச்சி கண்டது. முக்கியமாக 9 போட்டிகளில் மட்டும் பங்கேற்று 511 ரன்கள் குவித்துள்ள கெய்லின் பேட்டிங்தான் இதற்கு காரணம். சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அரைசதம் அடித்து மிரட்டிய இவர், இன்றும் அதிரடியை தொடர காத்திருக்கிறார்.
இவருடன் விராத் கோஹ்லி (444), டிவிலியர்ஸ் (262) ஆகியோரும் சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின் வரிசையில் சவுரப் திவாரி, முகமது கைப் ஆறுதல் தரலாம்.
ஜாகிர் அசத்தல்:
உலக கோப்பை தொடரைப் போல, வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் மீண்டும் துவக்கத்தில் விக்கெட்டுகளை சாய்ப்பது, பெரும் பலமாக உள்ளது. இவரது "சகா' அரவிந்த் தன் பங்குக்கு விக்கெட் வேட்டை நடத்துகிறார். அனுபவ கேப்டன் வெட்டோரி, அபிமன்யு மிதுன் என வலுவான பவுலிங் படை, சென்னை அணிக்கு மீண்டும் சிக்கல் தர காத்திருக்கிறது.
வெற்றி யாருக்கு?
இன்றைய போட்டியில் வெல்லும் அணி, நேரடியாக வரும் 28ம் தேதி நடக்கும், நான்காவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு முன்னேறலாம். தோல்வியடையும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது. இருப்பினும், முதல் அணியாக பைனலுக்கு செல்ல இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.
----
சென்னை ஆதிக்கம்
இதுவரை நடந்த ஐ.பி.எல்., போட்டிகளில், இரு அணிகளும் 9 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5ல் சென்னை கிங்ஸ் அணியும், 4ல் பெங்களூரு அணியும் வென்றுள்ளன.
-----

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts