background img

புதிய வரவு

சாதித்துக் காட்டிய சென்னை கிங்ஸ் அணி: விஜய், அஷ்வினுக்கு தோனி பாராட்டு

சென்னை: ஐ.பி.எல்., அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. இம்முறை சாம்பியன் கனவை நனவாக்கிய முரளி விஜய் அஷ்வினை, கேப்டன் தோனி வெகுவாக பாராட்டினார்.
இந்தியாவின் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த பைனலில் அபாரமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(205/5), பெங்களூரு ராயல் சாலஞ்ர்ஸ் அணியை(147/8) வீழ்த்தி, கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை இரண்டு முறை(2010, 11) வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை சென்னை அணி படைத்தது.

தமிழகத்துக்கு "ஜே':
அணியின் வெற்றியில் தமிழக வீரர்களான முரளி விஜய் (95 ரன்கள்), அஷ்வின்(3 விக்கெட்) முக்கிய பங்கு வகித்தனர். "ஆபத்தான' பெங்களூரு வீரர் கெய்லை "டக்' அவுட்டாக்கிய அஷ்வின், மீண்டும் ஒரு முறை தனது சுழல் திறமையை வெளிப்படுத்தினார். சென்னை அணிக்கு இன்னொரு முறை கோப்பை பெற்று தந்த "லக்கி' கேப்டன் தோனி கூறியது:
பைனலில் வெல்வதே ஒவ்வொரு வீரரின் நோக்கமாக இருக்கும். இதற்கேற்ப சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர். முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து அபார துவக்கம் தந்தனர். இவர்கள் 15வது ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடியது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதனால் தான் 200 ரன்களுக்கும் மேலான ஸ்கோரை எட்ட முடிந்தது.
அஷ்வின் மிகுந்த துணிச்சலாக பந்துவீசினார். "பீல்டிங்' கட்டுப்பாடு இருக்கும் போது வெளிவட்டத்தில் இரண்டு வீரர்கள் தான் இருப்பார்கள். இதனைப் பற்றி கவலைப்படாமல், பந்தை நல்ல உயரத்தில் வருமாறு சாதுர்யமாக வீசினார். அணிக்கு தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்தார்.
கடந்த ஐ.பி.எல்., தொடரில் தட்டுத்தடுமாறி தான் அரையிறுதிக்குள் நுழைந்தோம். இம்முறை ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடியதால், சிரமமின்றி கோப்பை வென்றோம்.

சிறிது ஓய்வு:
களத்தில் சிறப்பான முறையில் நடந்து கொண்ட அணிக்கான நன்னடத்தை விருதை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டால் தான் வெற்றி பெற இயலும் என்று சொல்வார்கள். ஆனால், நேர்மையான முறையில் நடந்து கொண்டு, வெற்றியும் பெறலாம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக வீட்டுக்கே செல்லவில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்காத நிலையில், ராஞ்சிக்கு சென்று ஓய்வு எடுக்க உள்ளேன்.
ரசிகர்கள் சோர்வு:
உலக கோப்பை தொடர் முடிந்த கையுடன் ஐ.பி.எல்., போட்டிகள் நடந்தது கடினமானதாக தான் இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் உலக கோப்பை வெல்ல வேண்டுமென விரும்பினார்கள். இதற்கேற்ப நாங்களும் வென்று காட்டினோம். உலக கோப்பை வென்றதும் உணர்ச்சிப்பூர்வமாக சோர்வடைந்த ரசிகர்கள், துவக்கத்தில் ஐ.பி.எல்., போட்டிகளை காண அதிகளவில் வரவில்லை. போகப் போக போட்டியை காண ஆர்வத்துடன் மைதானத்துக்கு திரண்டு வந்தனர்.
இவ்வாறு தோனி கூறினார்.

தோல்வி அடைந்த பெங்களூரு கேப்டன் வெட்டோரி கூறுகையில்,""பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட தவறினோம். 200 ரன்களுக்கு மேல் செய்வது "சேஸ்' செய்வது கடினம். 160 முதல் 170 ரன்கள் என்றால் "சேஸ்' செய்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக இத்தொடர் சிறப்பானதாக அமைந்தது. லீக் சுற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றதை சாதனையாக கருதுகிறேன்,''என்றார்.

இரவெல்லாம் உற்சாகம்
கோப்பை வென்ற உற்சாகத்தை அதிகாலை வரை சென்னை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்த "பார்ட்டி'யில் அனைவரும் பங்கேற்றனர். கால்பந்து பிரியரான கேப்டன் தோனி மட்டும் தனது மனைவியுடன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலை பார்த்தாராம். இதில், தனக்கு பிடித்தமான மான்செஸ்டர் யுனைடெட் அணி, பார்சிலோனாவிடம் தோற்றதால் மிகுந்த கவலை அடைந்திருக்கிறார். பின் சக வீரர்களுடன் சேர்ந்து "பார்ட்டி'யில் சிறிது நேரம் பங்கேற்றுள்ளார்.
விருதுகளும்...பரிசுகளும்...

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சாதித்த அணிகள் மட்டுமின்றி தனிப்பட்ட வீரர்களும் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

* கோப்பை வென்ற சென்னை அணி ரூ. பத்து கோடி பரிசாக பெற்றது.
* இரண்டாவது இடம் பிடித்த பெங்களூரு அணி ரூ. ஐந்து கோடி பரிசாக பெற்றது.
* ஆட்ட நாயகன் விருது வென்ற முரளி விஜய்( 95 ரன்கள்) ரூ. ஐந்து லட்சம் பரிசாக பெற்றார்.
* இத்தொடரில், 608 ரன்கள் குவித்த பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் தொடர் நாயகன் விருதை வென்றார். இவருக்கு ரூ. ஐந்து லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. தவிர, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த இவர், "ஆரஞ்ச்' நிற தொப்பியை கைப்பற்றியதால், ரூ. பத்து லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது. இத்தொடரில் அதிக "சிக்சர்' (44) விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த பெருமை இவரையே சேரும்.
* இத்தொடரில், அதிக விக்கெட்(28 விக்கெட்) வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ரூ. பத்து லட்சம் பரிசாக பெற்றார்.
* கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் இக்பால் அப்துல்லா, 15 போட்டிகளில் 16 விக்கெட் கைப்பற்றினார். இதனால் வளரும் வீரருக்கான விருதை வென்ற இவருக்கு ரூ. பத்து லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டது.
* அதிக "கேட்ச்' பிடித்தவர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் போலார்டு(10 "கேட்ச்')ரூ. பத்து லட்சம் பரிசாக பெற்றார்.
* சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணியின் வல்தாட்டி, 63 பந்தில் 120 ரன்கள் எடுத்தார். தவிர இவர் 14 போட்டிகளில் 463 ரன்கள் குவித்தார். இதனால் தனிநபர் சாதனையாளர் விருது வென்ற இவருக்கு, கார் ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டது.
* இத்தொடரின் சிறந்த ஆடுகளத்திற்கான விருது, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்திற்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts