background img

புதிய வரவு

கடற்கொள்ளையை தடுக்க இந்தியா தயார்: மன்மோகன்

அடிஸ் அபாபா : சோமாலிய கடல் பகுதியில் நடக்கும் கடல் கொள்ளையை, ஆப்ரிக்க நாடுகளுடன் இணைந்து தடுக்க இந்தியா தயாராக உள்ளது என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், எத்தியோபியா மற்றும் தான்சானியா நாடுகளுக்கு ஆறு நாள் பயணமாக சென்றுள்ளார். முதல் கட்டமாக, எத்தியோபியாவின் அடிஸ் அபாபா நகரில் நடந்த இந்திய - ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.

எத்தியோபிய பார்லிமென்டில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவும், ஆப்ரிக்காவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்தவை. இந்திய பெருங்கடல் நமது நாடுகளை பிரித்து விட்டது. இந்திய கலாசாரத்துக்கும், ஆப்ரிக்க நாட்டு மக்களுக்கிடையேயும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எத்தியோபியாவில் அணியப்படும் தலைப்பாகைக்கும் இந்தியர்களின் தலைப்பாகைக்கும் நிறைய ஒற்றுமை காணப்படுகிறது. தென்னிந்தியர்களின் உணவான தோசைக்கும், எத்தியோபியாவின் "இன்ஜாரா' என்ற உணவுக்கும் ஒற்றுமை உள்ளது. எத்தியோபியாவின் அடுலிஸ் நகரம் முன்பொரு காலத்தில் பட்டு, தந்தம், தங்கம் மற்றும் நறுமண உணவுப் பொருட்களின் சந்தையாக இருந்துள்ளது. வியாபார நிமித்தமாக இந்த நகருக்கு வந்த இந்தியர்கள் பலர் இங்கேயே தங்கி விட்டனர். மகாராஷ்டிராவில் உள்ள முருட் ஜன்ஜிரா என்ற கோட்டை, ஆப்ரிக்க சின்னங்களை பிரதிபலிப்பவையாக உள்ளது.

மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் புரட்சியும், கிளர்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், ஆப்ரிக்க கூட்டமைப்பு நாடுகள் தங்கள் பகுதியில் அமைதியையும், ஸ்திர தன்மையையும் ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்கை நிர்ணயிப்பதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. சர்வதேச நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டதாகவும், ஐ.நா., வரையறை செய்துள்ள தீர்மானத்துக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். சோமாலிய கடற்பகுதியில் கடற்கொள்ளையை தடுக்க ஆப்ரிக்க நாடுகளுடன் இணைந்து செயலாற்ற இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts