background img

புதிய வரவு

"மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது' : முதல்வர் ஜெ., பரபரப்பு பேட்டி

திருச்சி : ""மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது,'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க., அமைச்சர் நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வின் மரியம்பிச்சை, சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.நேற்று முன்தினம், சென்னையிலிருந்து திருச்சி வந்த அவர், நேற்று காலை 6.30 மணிக்கு பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவபதி, கலெக்டர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவுக்குப் பின், அங்கிருந்தே சென்னையில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் மரியம்பிச்சையும், சிவபதியும் தனித்தனி காரில் புறப்பட்டனர்.அமைச்சர் மரியம்பிச்சையின் கார் பாடாலூர் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில், காரின் ஒருபக்க முன்பகுதி நொறுங்கியது. டிரைவர் அருகில் உட்கார்ந்திருந்த அமைச்சர் மரியம்பிச்சை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அவருக்கு பின்னால் வந்த பாதுகாப்பு போலீசாரின் சுமோவில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு, போலீசார் கொண்டு வந்து பரிசோதித்த போது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின், மரியம்பிச்சை உடல், வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அமைச்சர் மரியம்பிச்சையின் மரண செய்தி கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழாவில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோருடன் தனி விமானத்தில், மதியம் 2.30 மணிக்கு திருச்சி வந்தார்.விமான நிலையத்தில் இருந்து நேராக, மரியம்பிச்சை வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அங்கிருந்த மரியம்பிச்சை மனைவி பாத்திமா கனி, மகன் ஆசிக் மீரான் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:மரியம்பிச்சை இழப்பு கட்சிக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு. மூன்று முறை மாநகராட்சி கவுன்சிலராக இருந்து படிப்படியாக அரசியலில் உயர்ந்தவர். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர், இப்படி அகால மரணம் அடைவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.பொதுமக்கள், கட்சியினர், அவரது குடும்பத்தாரிடம் விசாரித்ததில், மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது. அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்படும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். மரியம்பிச்சையின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts