background img

புதிய வரவு

இன்று சென்னையில் மோதல்-பெங்களூரை வென்று பைனலுக்குள் நுழையுமா மும்பை?

சென்னை: ஐபிஎல் 2வது குவாலிபயர் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று சென்னையில் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் வெல்லும் அணியே இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதும் வாய்ப்பைப் பெறும்.

முதல் பிளே ஆப் போட்டியில் சென்னை அணி, பெங்களூரை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது. 2வது பிளே ஆப் போட்டியில் மும்பை அணி, கொல்கத்தாவை வீழ்த்தியது.

இதையடுத்து இன்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2வது அணியைத் தேர்வு செய்யும் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் முதல் பிளே ஆப் போட்டியில் தோற்ற பெங்களூரும், 2வது பிளே ஆப் போட்டியில் வென்ற மும்பையும் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் மும்பை வென்றால்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். அதேசமயம், இறுதிப் போட்டிக்கான இன்னொரு வாய்ப்பைப் பெற்றுள்ள பெங்களூர் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஆர்வமாக உள்ளது.

மும்பை அணியைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, கிரன் போலார்ட் ஆகியோர் வலுவான பேட்டிங் ஆர்டரைக் கொடுக்கும் வகையில் உள்ளனர்.

மேலும் ஜேம்ஸ் பிராங்க்ளினும் சிறப்பான பேட்டிங்கை, குறிப்பாக நெருக்கடியான நேரத்தில் வெளிப்படுத்தி வருகிறார்.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக வலம் வரும் லசித் மலிங்கா கை கொடுப்பார். கூடவே முனாப் படேலும், ஹர்பஜன் சிங்கும் நல்ல பார்மில் உள்ளதால் மும்பைக்கு பலம்தான்.

பெங்களூரைப் பொறுத்தவரை கிறிஸ் கெய்லின் சூறாவளியில் அந்த அணி ஆரம்பத்திலிருந்தே உயரப் பறந்து வந்தது. ஆனால் சென்னைக்கு எதிரான பிளே ஆப் போட்டியில் கெய்லை சென்னை வீரர்கள் அடக்கி ஒடுக்கி விட்டதால் அந்த அணியால் எழ முடியாமல் போய் விட்டது.

10 போட்டிகளில் ஆடி 519 ரன்களைக் குவித்து அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக திகழ்கிறார் கெய்ல்.

அதேபோல விராத் கோலி, ஏப் டிவில்லியர்ஸ், மயங்க் அகர்வால் ஆகியோரும் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் லியூக் போமர்ஸ்பாக் ஆட்டமும் கவனிப்புக்குரியதே.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜாகிர்கான், கேப்டன் டேணியல் வெட்டோரி ஆகியோரே பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். ஸ்ரீநாத் அரவிந்த் கை கொடுக்கலாம்.

இரு அணிகளிலும் சில பலவீனங்கள், நிறைய பலங்கள் உள்ளன. அவற்றை சரி செய்து சரியான முறையில் விளையாடும் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts