background img

புதிய வரவு

2ஜி: நாடாளுமன்ற குழு முன் சிஏஜி வினோத் ராய் ஆஜர்-ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு குறித்து விளக்கம்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் தலைமை கணக்கு தணிக்கைத் துறை அதிகாரி வினோத் ராய் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்தே இந்த விவகாரத்தில் விசாரணை சூடு பிடித்தது. இதனால் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா பதவி விலக நேரிட்டது.

இந்த ஊழல குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக இது குறித்து நாடாளுமன்றத்தின் அரு அவைகளைச் சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குழுவுக்கு முன்பு பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி தலைவராக இருந்து விசாரணை நடத்தினார். குழுவின் பிற உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமலேயே தானாகவே ஒரு அறிக்கை தயாரித்து சபாநாயகரிடம் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடு்த்து அவரது பதவிக் காலம் முடிந்தது. இப்போது காங்கிரஸ் கட்சி எம்.பி. சாக்கோ இந்தக் குழுவின் தலைவராக உள்ளனர்.

இந்தக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு வருமாறு மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிக்கு கூட்டுக் குழு உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று இன்று காலை கூட்டுக் குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் ஆஜரானார்.

அவரிடம், கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, எந்த அடிப் படையில் கணிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வினோத் ராய் விளக்கம் அளித்தார்.

1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தை எடுத்துக் கூறிய அதிகாரி வினோத் ராய், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களையும் விளக்கமாகக் கூறியதாகத் தெரிகிறது.

முன்னதாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பும் ஆஜராகி ராய் விளக்கம் தந்துள்ளது நினைவுகூறத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts