background img

புதிய வரவு

கோட்டையில் இன்று பதவியேற்பு விழா : தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வம்

கோட்டையில், இன்று, முதல் முறையாக பதவியேற்கவுள்ள தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இவ்விழாவின் போது அணிய வேண்டிய பொருட்களை, அவர்கள் சென்னையில், நேற்று "ஷாப்பிங்' செய்தனர். அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, தி.மு.க., வேட்பாளர்களை வீழ்த்தி விருகம்பாக்கம், எழும்பூர்(தனி) ஆகிய இரண்டு தொகுதிகளையும் சென்னையில் அக்கட்சி கைப்பற்றியுள்ளது.
தி.மு.க.,வின் எதிர்பாராத படுதோல்வியால், ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றிப்பெற்ற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். விஜயகாந்த் உள்ளிட்ட, 29 தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், இன்று, கோட்டையில் பதவியேற்கவுள்ளார். இதில் விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர, மற்ற 27 பேரும், சட்டசபைக்கு புதியவர்கள். முதல் முறை சட்டசபைக்கு செல்லவுள்ள அவர்கள், மிகுந்த குஷியடைந்துள்ளனர்.
இதில், பலர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் அவர்கள் தங்கியுள்ளனர். அவர்களுடன் வந்துள்ள கட்சி நிர்வாகிகளும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பதவியேற்பு விழாவுக்கு செல்லும்போது அணிய வேண்டிய ஆடைகள், நறுமன பொருட்கள், காலணிகள், வாட்ச், கண்ணாடி உள்ளிட்டவற்றை சென்னையில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மால்களில், சூஷாப்பிங்' செய்வதில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ஆர்வம் காட்டினர்.
அவர்களுடன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் சென்றனர். மேலும், சட்டசபையில் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும், பதவிப் பிரமாணத்தை எப்படி வாசிக்கவேண்டும் என்பதை விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரனிடம் கேட்டு, அவர்களில் பலர் தெரிந்து கொண்டனர்.
பிரியாணி விருந்து: தே.மு.தி.க.,வை வெற்றிப்பெற வைத்த கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து வழங்க வேண்டும் என, விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிகளில் விருந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு தொகுதியில் விருந்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
கணக்குக்கு விருந்து வைக்காமல், கூட்டணி கட்சியினர் திருப்திப்படும் படியாக விருந்து நடக்க வேண்டும் என்பதால் அதை கண்காணிக்கவும் விஜயகாந்த் குழு அமைத்துள்ளார். அதன்படி முதல் விருந்து தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில் நேற்று நடந்துள்ளது.
பா.ம.க., வேட்பாளரை வீழ்த்தி எம்.எல்.ஏ.,வான சி.எச்.சேகர் ஏற்பாட்டில் ஆடு, கோழி வெட்டி, 10 ஆயிரம் பேருக்கு நேற்று தடபுடல் பிரியாணி விருந்து வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, விஜயகாந்தின் ரிஷிவந்தியம் தொகுதியில் விரைவில் விருந்து நடக்கவுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts