background img

புதிய வரவு

கனவுலகப் பாலுணர்வின் பிரச்சினைகள் !

ஏற்கெனவே பார்த்தது போல சுற்றியிருக்கும் உலகிலிருந்து பாலுறவுத் தகவல்கள் பல நூறு வழிகளில் ஒரு மனிதனின் சிந்தனையில் இறங்குகிறது. இறக்குமதியானவை வினையாற்றாமல் சும்மா இருப்பதில்லை. இவை இளைஞர்களின் விடலைப் பருவத்திலிருந்தே பாலுணர்வு குறித்த கற்பனைகளை மெல்ல மெல்லக் கிளப்பி விடுகின்றன. இளைய பிரிவினரின் கணிசமான நேரத்தை ஆக்கிரமித்திருக்கும் இக்கற்பனைகள் பாலுறவின் யதார்த்தமான சித்திரத்தை அழித்துவிட்டு அதீதப் புனைவுடன் மிகையான குழப்பமான சித்திரத்தை உருவாக்குகின்றன. இது அதிகரிப்பதற்கேற்ப அவர்கள் அந்நியப்படுவதும் ஆளுமை பலவீனமாவதும் நடந்தேறுகிறது.


எந்தச் சமூகத்தில் ஆணும் பெண்ணும் கறாராகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறார்களோ, பேசவும் – பழகவுமான வாய்ப்புகள் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அங்கே எதிர்பாலினைக் குறித்த கவர்ச்சியும், கற்பனையும் அதிகமிருக்கும். ஆனாலும் வீட்டிலிருந்தாலும், வேலைக்குச் சென்றாலும் “இல்லறமே நல்லறமென’ப் போதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் ஆண்களின் உடம்பு குறித்து அதிகம் அலட்டுவதில்லை. மாறாக, வாழ்க்கையின் இன்ப – துன்பம், வசதி – வாய்ப்பு குறித்து “கருணை’ காட்டும் ஆண்கள் மீதுதான் சற்று உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆணுக்கோ பெண்ணுடம்பு குறித்து மோகம் கொள்வதோ முதன்மையாக இருக்கிறது.


ஆணுலகு கற்பனை செய்யும் பெண்ணுடம்பின் பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சினிமா உருவாக்குகிறது. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதை ஒளிவட்டம் போட்டுக் கவனப்படுத்துகிறது. தொடைக்கு ரம்பா, இடுப்புக்கு சிம்ரன் – ஐஸ்வர்யா ராய், மார்பகத்துக்கு மந்த்ரா, கண்களுக்கு பானுப்பிரியா – சிலுக்கு, அப்புறம் மூக்கு, உதடு, கை – கால்கள் என்று ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் அத்தனை உறுப்புகளும் மிகையான கற்பனையால் கிளர்ச்சியூட்டும் விதத்தில் பதிந்து போகின்றன. பொது இடங்களில் சந்திக்கும் போதெல்லாம் ஆண்கள் வெறித்துப் பார்ப்பதும், அல்லது நாகரிகமான முறையில் பட்டும் படாமலும் பார்ப்பதும், பெண்கள் ஜாக்கெட்டை இழுத்து விடுவதும், மாராப்பைச் சரி செய்வதும் இயல்பான சமூக நடைமுறைகளாகி விட்டன. ஆண்களுக்காக அடுப்புக் கரண்டியைப் பிடிப்பதில் அதிக நேரம் செலவழிக்கும் பெண்களின் கைகள், அதற்கடுத்து உடைகளைச் சரிசெய்வதிலேயே ஓய்ந்து போகின்றன.


ஆணைப் போலவே சிறுநீர், மலம், வியர்வை, ரத்தம், சளி அடங்கிய இயல்பான பெண்ணுடம்பு குளிர்பதனப் பெட்டியில் வாடாமல் வைக்கப்பட்டிருக்கும் “ரோஜாவை’ப் போல மனதில் பதியன் செய்யப்படுகிறது. அடுத்து இந்த “ரோஜாவை’ நுகருவதற்கு, உண்மையில் கசக்குவதற்கு மிகை யதார்த்தக் காட்சிகள் இளையோரின் அக உலகில் கட்டப்படுகின்றன. முத்தமும், உடலுறவும் வெண்திரையின் நிழலில் ஆவேசத்துடன் நிஜம் போல ஆடுகின்றன. பலியாடுகளைப் போல உறவு கொள்ளும் மலையாள “ஏ’ படங்களை விட படுநேர்த்தியாகக் கிளர்ச்சியூட்டும் ஹாலிவுட் படங்கள் நனவுலகிற்குப் புறம்பான கற்பனையைத் தூண்டி விடுகின்றன.


நாம் உணருவது போல அந்தப் படங்களில் இருவர் “உண்மையில்’ உறவு கொள்வதில்லை; நடிக்கவே செய்கிறார்கள். அதன் பின்னே பலரது சோடனைத் திறமையும், தொழில்நுட்பமும் சேர்ந்திருக்கிறது. ரம்மியமான ஒளி, மென்மையை நுட்பமாக உணர்த்தும் ஒலி, நேர்த்தியான படத்தொகுப்பு, மறக்க முடியாத “மூடுகள்’, விரகதாபத்தை மிகையாக வெளிப்படுத்தும் அபிநயங்கள் எல்லாம் சேர்ந்து பாலுறவின் உணர்ச்சியை யதார்த்தத்திலிருந்து பல அடி உயரத்திற்கு ஆவேசமான அலையாக எழுப்புகின்றன.


ஆனால் யதார்த்தமான ஒரு பாலுறவில் இவையெல்லாம் சாத்தியமேபயில்லை! டபிள்யூ. டபிள்யூ. எஃப் (WWF) மாமிச மலைகளின் மல்யுத்தக் காட்சிகள் தொடங்குமுன், “”இது எங்கள் தொழில்முறை வீரர்களின் அதி உயர் பயிற்சியினால் நடத்தப்படும் சண்டைக் காட்சிகள். இதைப் பார்த்துச் சண்டை போடுவது உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்’’ என்று எச்சரிக்கை வெளியிடுகிறார்கள்; படுக்கைக் காட்சிகளுக்கு அப்படிப் போடுவதில்லை – அவ்வளவுதான்.


உண்மையில் வெண்திரை உருவாக்கியிருக்கும் பாலுறவுக் கற்பனை சக மனிதனை உயிரும் உணர்வும் உள்ள தன் உயிரின நீட்சியாக நேசிப்பதில்லை. ஒரு பண்டமாகத்தான் பார்க்கிறது; ஆவேசமான வடிகாலாகப் பயன்படுத்துகிறது; அலட்சியம் செய்கிறது. ஆதலால் இங்கே மகிழ்ச்சியில்லை. வெறியைத் தணிப்பது மட்டும்தான் நடக்கிறது.


இருப்பினும் பெண்ணுடம்பு, உறவு பற்றி இளைஞர்களின் கற்பனையில் உண்மையைப் போல உருவாகும் இக்கண்ணோட்டம் இத்துடன் நிற்பதில்லை. மேலும் பயணம் செய்கிறது. அந்தக் கற்பனையில் உருவான பிம்பங்களையும், காட்சிகளையும் சமூக யதார்த்தத்தில் உரசிப் பார்க்கும் களனையும், பாத்திரங்களையும் “செய்திகள்’ என்ற பெயரில் பத்திரிக்கைகள் தருகின்றன.


வயதான கணவனிடம் வாடிப்போன மனைவி, ஆண்மையற்ற கணவனிடம் பெருமூச்சு விடும் மனைவி, வெளிநாட்டில் கணவன் – வாய்ப்பில்லாத மனைவி, கேபிள் டி.வி., விற்பனைப் பிரதிநிதிகள் மயக்கும் குடும்பப் பெண்கள், உடம்புச் சுகத்துக்கு ஏங்கும் மலையாளப் பெண்கள் – கிறித்தவக் கன்னியாஸ்திரீகள், உறவுக்கு ஒத்துழைக்கும் வேலைக்காரப் பெண்கள், மாணவனைக் காதலிக்கும் டீச்சர்கள், உறவை மறக்க முடியாமல் தவிக்கும் விதவைகள், வெளியூரில் தங்கி லீலை செய்யும் பெண்கள், சாமியார்களின் நிர்வாண பூசைக்குச் சமர்ப்பணமாகும் வீட்டுப் பெண்கள், மெரினா, முக்கொம்பு, மருதமலையில் அவசரமாகத் தழுவும் காதலர்கள்.. .. என பார்வையில் பழக்கத்தில் தென்படும் அத்தனைப் பெண்களும் பத்திரிக்கைச் செய்திகளின் உதவியால் இளைஞர்களின் அக உலகுக்குள் சென்று ஆசை காட்டுகிறார்கள்.


பருவமடைந்த பின் இயற்கையான உயிரினத் தூண்டலினால் அனைவரிடமும் ஏற்படும் பழக்கமான சுய இன்பம் இத்தகைய காட்சி, கதைகளுடன் சேர்ந்து கொண்டு புதிய பரிணாமம் அடைகிறது. காணும் பெண்களையெல்லாம் இரகசியமாக மோகிப்பது ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. முழுஉலகமும் – அந்தப் பெண்களும் சகஜமாய் இருக்கும்போது, தான் மட்டும் காமத்திற்கு ஆட்படுவது குறித்து குற்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த முரண்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கேற்ற சமூக நடவடிக்கைகள் இல்லாதபோது இளைஞர்கள் தனிமைப்படுவதில் போய் முடிகிறது. இதில் ஒரு பிரிவு இளைஞர்கள் இவையெல்லாம் சகஜம்தானே என்று சமரசம் செய்து கொண்டு தேர்ந்த காரியவாதியாக மாறுகிறார்கள். அப்படி மாற முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கும் பெரும்பான்மை இளைஞர்கள், தாம் தவறு செய்கிறோமே என்ற அச்சத்துடனும், வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்துடனும் வாழ்க்கையை மகிழ்ச்சியற்று நடத்துகின்றார்கள். கற்றும், உழைத்தும் தேர்ச்சியடைய வேண்டிய இளைஞர்களுடைய ஆளுமை வாடி வதங்குகிறது.


பாலுணர்வு குறித்த இந்தக் கற்பனைக் கண்ணோட்டம் ஆணுக்கும், பெண்ணுக்கும் எதிர் பாலினரைக் கவருவதையே முக்கியமான வாழ்க்கை வேலையாக மாற்றிவிட்டது. உடல், இடுப்பு, நகம், மார்பு, முகப்பரு, மஞ்சள் பல், வாய்நாற்றம், படியாத தலை, சுருளாத முடி, தேவையற்ற ரோமங்கள் என முடிவேயில்லாத உடல் பிரச்சினைகள். கூடவே உடை, அலங்காரம், செருப்பு, வாழ்க்கை முக்கியமான அங்கங்களாகி விடுகிறது. சமூகக் களத்தில் உருவாக வேண்டிய அழகு, நிலைக்கண்ணாடி முன் நெடு நேரம் நின்று ரசிக்கும் அவலமாகி விடுகிறது.


முடிவில் பாலுறவு குறித்த சமூக யதார்த்தத்திற்கும், அகநிலையில் உருவாகும் கற்பனைச் சித்திரத்திற்குமுள்ள முரண்பாடு காதல், திருமணம், தாம்பத்திய வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கிறது. அதிலிருந்து இதுதானா, இவ்வளவுதானா என்று அதிர்ச்சியுறும் அறிவு எது உண்மை, எது பொய் என்பதைப் புரிந்து கொள்வதற்குள் வாழ்க்கை எங்கோ போய்விடுகிறது; சில நேரங்களில் முடிந்தும் போகிறது.


விழுப்புரமருகே லாரி ஓட்டுநராக இருக்கும் ஒரு இளைஞன் ஆந்திராவின் விபச்சாரி ஒருத்தியிடம் ஒரு புதிய அனுபவம் அடைகிறான். அவள் தான் கற்பழிக்கப்படுவது போலத் தயாரிக்கப்பட்ட ஒரு நீலப்படத்தைக் காண்பித்து மகிழ்ச்சியளிக்கிறாள். ஊர் திரும்பிய அவன் பின்னர் தனது உறவுப் பெண்ணொருத்தியைக் காதலித்து மணக்கிறான். முதலிரவில், அந்த ஆந்திர அனுபவத்தை அரங்கேற்ற முயல்கிறான். அவள் மீது பாய்ந்து உடைகளைக் கிழிக்கிறான். மணமகள் வீறிட்டலறுகிறாள். அவமானத்தில் கூனிக் குறுகியவன் மண்ணெண்ணெயைத் தன் மேல் ஊற்றிக் கொண்டு, “கற்பழிப்புக்கு’ உடன்படாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக அவளை மிரட்டுகிறான். தவறுதலாகத் தீப்பிடித்து எரிகிறான். மருத்துவமனை வாக்குமூலத்தில், “”என் மனைவி நல்லவள், நான்தான் விளையாட்டாய் இப்படிச் செய்து விட்டேன்’என்று பேசிவிட்டு ஓரிரு நாட்கள் கழித்து செத்தும் போனான்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts