background img

புதிய வரவு

தி.மு.க.,விற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் சேலம் மாவட்டம்

முதல்வர் தலைமையில் மாவட்ட வாரியாக நடத்தப்படும் தி.மு.க., கருத்துகேட்பு கூட்டத்தில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகனும், எம்.எல்.ஏ.,வுமான ராஜா பற்றி சரமாரியான புகார்களை அடுக்க, எதிர் தரப்பு முடிவு செய்துள்ளது. கூட்டத்துக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சட்டசபை தேர்தலில் ஐந்து முறை வெற்றி பெற்றதை காட்டிலும், 2011 தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், தி.மு.க., உறுதியாக உள்ளது. நான்கு ஆண்டுகள் பிரச்னையின்றி செயல்பட்ட தி.மு.க., அரசுக்கு, தற்போது நெருக்கடி முற்றியுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதாகரமாக வெடித்துள்ளது, தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட வாரியாக கட்சியினர் கருத்து கேட்பு கூட்டத்தை இரண்டு மாதத்துக்கும் மேலாக, தி.மு.க., தலைமை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட செயலரின் அதிகாரப் போக்கு, கட்சி நிர்வாகிகளை மதிக்காதது, பொதுமக்களிடம் உள்ள அதிருப்தி போன்றவற்றை கட்சியினர் கூறி வருகின்றனர்.
இதுவரை, 18 மாவட்டங்களின் கருத்துகேட்பு கூட்டம் நடந்த நிலையில், இன்னும் 12 மாவட்டங்களுக்கு கூட்டம் நடத்த வேண்டியுள்ளது. இந்த வாரத்தில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் கூட்டம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. லோக்சபா தேர்தலின் போது, அமைச்சரின் ஆட்கள் அங்கம்மாள் காலனியில், 113 பேரின் இடத்தை கைப்பற்ற முயன்ற பிரச்னையை முன்வைத்து, அ.தி.மு.க.,வினர் செய்த பிரசாரத்தால், அக்கட்சி எளிதாக வெற்றி பெற்றது. 11 சட்டசபை தொகுதியிலும் குறைவான ஓட்டுக்களையே தி.மு.க., கூட்டணி பெற்றது. சேலம் மாநகரப் பகுதிகளில் ஓட்டு சதவீதம் வெகுவாக சரிந்திருந்தது.
இந்த சூழலில், அமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் நடந்த நில ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து, சொத்து அபகரிப்பு, ரவுடியிசம் போன்ற சம்பவங்கள், தி.மு.க., மீதும், அமைச்சர் தரப்பு மீதும் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அமைச்சரின் தம்பி மகன் சுரேஷ்குமார் கைதானதும், சேலம் மத்திய சிறைக்கு சென்று, அவரை அமைச்சர் நேரில் சந்தித்து வந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும், செயல்வீரர் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ச்சியில்லாமல் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் கைப்பற்ற, அ.தி.மு.க., கூட்டணி மும்முரமாக உள்ளது. அமைச்சர் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை பிரசாரம் மூலம் எடுத்துரைத்து, எளிதாக வெற்றியை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க., உள்ளது.
இதையெல்லாம் பட்டியலிட்டு, அமைச்சருக்கு எதிராக தி.மு.க.,வில் செயல்படும் ஒரு தரப்பு, கருத்து கேட்பு கூட்டத்தில் எடுத்துக்கூறி, தி.மு.க., தலைமை ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும், தி.மு.க.,வுக்கு தற்போதைய சூழ்நிலையில், பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் தான். இப்பிரச்னைக்கு முதல்வர் கருணாநிதி எவ்வாறு நிவாரணம் தேடுவார் என்பது தான், தி.மு.க.,வினரிடம் பரபரப்பாக நடைபெறும் விவாதமாகி விட்டது.
-நமது சிறப்பு நிருபர்-


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts