background img

புதிய வரவு

கர்ப்பம் தரிக்கும் காலம் எது தெரியுமா ?

சிறு குடும்பத் திட்டத்தை மத்திய அரசு வலியுறுத்துகிறது. "நாம் இருவர், நமக்கு மூவர்' போய், "நாம் இருவர், நமக்கிருவர்' வந்து, இப்போது, "நாம் இருவர், நமக்கொருவர்' என்பது, கொள்கை முடிவாகி விட்டது. கருத்தடைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்து விட்டது. எனினும், கருத்தடை குறித்து, பெரும்பாலான பெண்கள் அறிந்து கொள்ளவே இல்லை. மூட நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் தான் பரவலாகக் காணப்படுகின்றன.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண், கர்ப்படைய மாட்டார்...
* மாதத்திற்கு ஒரு முறை செக்ஸ் வைத்து கொண்டால், குழந்தை உருவாகாது...
* தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டால் தான், குழந்தை உருவாகும்...
* கருத்தடை செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல...
இதுபோன்ற நம்பிக்கைகளில் உழல்வதால், 23 சதவீதப் பெண்களுக்கு, திட்டமிடா கருவுறுதல் ஏற்படுகிறது.
கருத்தரிப்பு காலம் மற்றும் மகப்பேறு ஆகியவை ஏற்படும் நேரங்களில், நம் உடல் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்; கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். கருத்தடைக்கு, பெண்களுக்கென பாதுகாப்பு வழிமுறைகள் நிறைய உள்ளன. மாதத்தில், குறிப்பிட்ட சில தினங்களில் மட்டுமே பெண்கள் கருத்தரிக்க முடியும். ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் தொடங்குவதற்கு, 14 நாட்கள் முன்னதாக, சினைப்பையிலிருந்து முட்டை வெளியேறும். அது 12 முதல் 24 மணி நேரமே உயிருடன் இருக்கும். ஆணின் விந்து 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். இந்த நாட்களில் உடலுறவை தவிர்த்தால், கர்ப்பம் தரிக்காமல் தவிர்க்கலாம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு, மிகச்
சரியாக மாத விடாய் ஏற்படுவதில்லை என்பதால், இந்த நடைமுறை சாத்தியப்படுவதில்லை. பெண்களின் பிறப்புறுப்பில் தடவிக் கொள்ளும் நோநோக்சினால் - 9 என்ற களிம்பு, கருத்தடைக்கு ஏற்ற மருந்து. உடலுறவின் போது இதை தடவிக் கொள்ளலாம். ஒரு மணி நேரம் வரை பயன் தரும். எனினும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மருத்துவச் சீட்டு இல்லாமலேயே மருந்து கடைகளில் கிடைக்கும் களிம்பு இது.
விந்துவை அழிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம். கூடவே, ஜவ்வு போன்ற ஒரு தடைக் கருவியும் (டயாப்ராகம்) பயன்படுத்த வேண்டும். உடலுறவுக்குப் பின் எட்டு முதல் 12 மணி நேரம் வரை இதை அகற்றக் கூடாது; ஆனால், 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.
பெண்கள், "காப்பர் டி'யும் பொருத்தி கொள்ளலாம். மூன்று, ஐந்து, 10 ஆண்டுகள் வரை பயன்பாடு கொண்ட, "காப்பர் டி'க்கள் கிடைக்கின்றன. மகப்பேறு மருத்துவர் மூலம் இதைப் பொருத்திக் கொள்ளலாம். வெளிநாட்டு தயாரிப்புகளும் கிடைக்கின்றன. "காப்பர் டி' கருவியை, அரசும் இலவசமாக வினியோகிக்கிறது. பெண்களுக்கு உடலில் புரோஜெஸ்டரோன் அளவை அதிகரிக்கும் வகையிலான ஊசிகளும் உள்ளன. அவற்றை 12 வாரத்திற்கு ஒரு முறை போட்டு கொள்ள வேண்டும். இந்த ஊசி போட்டுக் கொள்வோர் உடல் எடை அதிகரிக்கும். மாதவிடாய் சரியாக ஏற்படாது. விட்டு விட்டு ரத்தப்போக்கு இருக்கும். இதனால், சினைப்பையிலிருந்து முட்டை வெளியேறும் காலம் எதுவென கண்டறிய முடியாத நிலை ஏற்படும். கருத்தடைக்கு வாய்வழி மாத்திரைகளும் உள்ளன. இவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டரோன் அடங்கியவை இவை. பல நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்கின்றன. அரசு, "மாலா டி' என்ற பெயரில், இலவசமாக இந்த மருந்தை வினியோகிக்கிறது. தொடர்ந்து 21 நாட்கள் இதை சாப்பிட வேண்டும். பின், ஏழு நாள் இடைவெளி விட்டு, மீண்டும் சாப்பிட வேண்டும். சில நேரங்களில், இடைவெளி காலத்திலும் சில மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அவை, மாதவிடாயை சீர்படுத்தி, கருத்தடை ஏற்படுத்துகின்றன. இவற்றை சாப்பிட்டால், புற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்படாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், புரோஜெஸ்டரோன் மட்டும் அடங்கிய மாத்திரைகளை சாப்பிடலாம். இந்த மாத்திரையை, இடைவெளி இல்லாமல் சாப்பிடலாம். சமீபத்தில், ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டரோன் அடங்கிய வளையம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பெண்கள், பிறப்புறுப்பில் அணிந்து கொள்ள வேண்டும். மூன்று வாரங்களுக்கு இதை அணிந்த பின், ஒரு வார இடைவெளியில் புதிதாக இன்னொன்றை அணிய வேண்டும்.
இதை பெண்களே அணிந்து கொள்ளும் வகையில், எளிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாத்திரை சாப்பிடவில்லை என்ற கவலையில் உள்ளவர்கள், மாத்திரையை தவிர்த்து, இந்த முறையை கையாளலாம்.
ஆண்கள், ஆணுறைகளைப் பயன்படுத்தலாம். உடலுறவின் முழு நேரமும் இதைப் பயன்படுத்த வேண்டும். கூடவே, விந்துக்கொல்லி களிம்புகளையும் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பற்ற மற்றும் பலருடனான உடலுறவு, பாலியல் ரீதியான நோய்களை உருவாக்கும். இதனால் ஏற்படும் ஹெப்பாடைட்டிஸ் பி வைரஸ் மற்றும் எச்.ஐ.வி., தொற்று ஆகியவை, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
ஆணுறை மட்டுமே இதுபோன்ற நோய்களை தவிர்க்க உதவும். பாதுகாப்பற்ற உடலுறவு, கருத்தரிக்கும் நிலையை ஏற்படுத்தும். அடுத்த மாதவிடாய் எதிர்நோக்கி காத்திருக்கையில், இது, "டென்ஷனை' ஏற்படுத்தும்.
இதை தவிர்க்க, உடலுறவுக்கு பிந்தைய, "மார்னிங் ஆப்டர்' மாத்திரைகளை பயன்படுத்தலாம். மருத்துவச் சீட்டு இல்லாமல் இதை வாங்கக் கூடாது என்றாலும், பெரும்பாலான மருந்து கடைகளில் இது கிடைக்கிறது. உடலுறவு முடிந்த உடனேயே, இந்த மாத்திரையை சாப்பிட்டு விட வேண்டும். 72 மணி நேரத்திற்குள் சாப்பிட்டால், 80 சதவீத பாதுகாப்பு கிடைக்கும். இந்த மருந்து, புரோஜெஸ்டரோன் மட்டுமோ அல்லது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டரோன் ஆகியவை இரண்டுமோ, அதிகளவு கொண்டதாக இருக்கும். தினமும் சாப்பிடும் மாத்திரைகளை விட, இது வீரியம் நிறைந்தது. இதை தவிர, 12 மணி நேர இடைவெளியில் சாப்பிடக் கூடிய மாத்திரைகளும் உள்ளன.
கரு உருவாகிவிட்டால், இந்த மாத்திரைகள் பயன் தராது. கருக்கலைப்புக்கென உள்ள மாத்திரைகளை சாப்பிட வேண்டி இருக்கும். அவையும், கடைசி மாதவிடாய் நாளிலிருந்து 49 நாட்கள் வரை மட்டுமே பயன்படும். மேலே கூறப்பட்ட அனைத்துமே, மிகவும் அரிதாக பயன்படுத்தக் கூடியவையே. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல. தொடர்ந்து பயன்படுத்தினால், ஆரோக்கியம் கெட்டு விடும்.
-டாக்டர் கீதா மத்தாய்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts