background img

புதிய வரவு

அரசியல் கட்சிகளுக்கு மீரா குமார் மீண்டும் அழைப்பு : பார்லிமென்ட் முடக்கத்தை நீக்க முயற்சி

புதுடில்லி : "பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைமையை முடிவுக்கு கொண்டு வர, அரசியல் கட்சிகள் முற்பட வேண்டும்' என லோக்சபா சபாநாயகர் மீரா குமார் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே நேரத்தில், "பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்கும்' என நம்புவதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தின. இதே கோரிக்கையை பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத்தொடரிலும் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், சபை நடவடிக்கைகள் முடங்கின. ஒரு நாள் கூட சபை முழுமையாக நடக்கவில்லை. "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி குறித்து, பார்லிமென்டின் சிறப்பு கூட்டத் தொடரை கூட்டி விவாதிக்கத் தயார்' என மத்திய அரசு அறிவித்தும், அதை ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைப்பதை தவிர, வேறு எந்த யோசனையையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினால், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடரும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. இது, மத்திய அரசுக்கு சங்கடம் தரும் அம்சமாகும். ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு பார்லிமென்ட் விவாதங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், அதற்கடுத்ததாக 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்ற மூன்று அம்சங்களையும் விவாதிக்க வாய்ப்பு கிடைக்காது என்பதே எதிர்க்கட்சிகள் வாதம். தற்போது சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக விசாரிக்கப்பட்டாலும், கடந்த இரு ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு பின்னணி யார் என்பதை ஜே.பி.சி., சுலபமாக கண்டறியும் என்று பா.ஜ., மட்டுமல்ல, இடதுசாரி கட்சிகளும் கருதுகின்றன. ஆனால், இதே போக்கு நீடித்தால், அது எங்கேயாவது லோக்சபா இடைத்தேர்தலை கொண்டு வந்து விடுமோ என்ற கருத்து தான் தற்போது அடுத்ததாக பேசப்படுகிறது. ஆகவே, மீண்டும் பார்லிமென்டில் கூச்சல், ரகளை, ஒத்திவைப்பு இருக்கக்கூடாது என்று ஆளும் அரசு கருதுகிறது. ஏற்கனவே கூட்டத்தொடர் ரகளை சமயத்தில் சுமூக தீர்வு காண விரும்பி சபாநாயகர் முயற்சி மேற்கொண்டார்; அது பலிக்கவில்லை.

மீண்டும் நேற்று கோல்கட்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக் குழு வேண்டும் என, எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக உள்ளன. இதனால், முட்டுக்கட்டை நிலைமை ஏற்பட்டு குளிர்கால கூட்டத்தொடரே நடக்கவில்லை. அந்த நிலைமை மீண்டும் தொடரக்கூடாது. அதற்கு அரசியல் கட்சிகள் ஒரு சுமூக தீர்வு காண வேண்டும். எம்.பி.,க்கள் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். பார்லிமென்ட் முட்டுக்கட்டை நிலைமை தொடர்வதை அவர்களும் விரும்பமாட்டார்கள். பேச்சு வார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணலாம். விரைவில் பேச்சு வார்த்தை நடந்து, நல்ல முடிவு காணப்படும் என நம்புகிறேன். ஜனநாயகம் என்றாலே எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வை கண்டு, பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அந்த அடிப்படையில், தற்போதைய பிரச்னைக்கும் தீர்வு காணப்பட்டு விரைவில் சுமூக நிலை திரும்பும் என நம்புகிறேன். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று சரியாகச் செயல்படவில்லை எனில், அது மக்களின் நம்பிக்கையை சீர் குலைத்துவிடும். இவ்வாறு மீரா குமார் கூறினார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக டில்லியில் நிருபர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டுக் குழு என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியது. அதே போன்ற நிலைமை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் தொடரும் என, நினைக்கவில்லை. எதிர்க்கட்சியினர் தங்களின் மன நிலையை மாற்றிக் கொள்வர் என நம்புகிறேன். எதிர்க்கட்சிகள் சம்மதித்தால், ஸ்பெக்ட்ரம் பிரச்னை தொடர்பாக சிறப்பு விவாதம் நடத்தவும், அதற்காக பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டவும் நான் தயாராக உள்ளேன். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன், கூட்டுக் குழு விவகாரத்தில் ஒரு முடிவு காண வேண்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts