background img

புதிய வரவு

தணிக்கை துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேள்வி : ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு எப்படி என விசாரணை

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது எப்படி என, மத்திய தணிக்கை துறை அதிகாரியிடம், பார்லிமென்ட் பொதுக் கணக்குக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஆவணங்களையும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அறிக்கை அளித்தது. இதைத் தொடர்ந்து, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, பதவி விலகினார். "இந்த விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியதால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கியது.

மத்திய தணிக்கை துறை அதிகாரி ஆஜர்: இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பார்லிமென்ட் பொதுக் கணக்குக் குழு நேற்று விசாரணை நடத்தியது. அப்போது, மத்திய தணிக்கை துறை அதிகாரி வினோத் ராய், நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். குறிப்பாக, 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, ஏற்கனவே அளித்த அறிக்கையில் குறிப்பிட்டது குறித்து விளக்கமளித்தார். பொதுக் கணக்குக் குழுவில் இடம் பெற்றுள்ள எம்.பி.,க்கள், இதுகுறித்து சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அரசுக்கு இழப்பு ஏற்பட்டது எப்படி, இதில் தொடர்புடையவர்கள் யார், விதிமுறைகள் மீறப்பட்டனவா, விதிமுறை மீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார் என்பது போன்ற, சந்தேகங்கள் குறித்தும், தணிக்கை துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேட்டனர். இதற்கு அவர் விளக்கம் அளித்தார். அத்துடன் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களையும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

விசாரணைக்கு பிரதமர் தயார்: இந்நிலையில், பார்லி.,பொதுக் கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, பார்லி., பொது கணக்குக் குழு முன், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயார்' என, தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த கடிதத்தை, லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கு, முரளி மனோகர் ஜோஷி பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரை நேரில் அழைத்து பொதுக்கணக்கு குழு விசாரிக்குமா: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக பார்லிமென்ட் பொதுக் கணக்குக் குழு நேற்று விசாரணை நடத்தியது. பொதுக் கணக்குக் குழு முன், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயார்' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். லோக்சபா விதிமுறைகளின்படி, பொதுக் கணக்குக் குழு, தனது எந்த ஒரு விசாரணைக்காகவும், அமைச்சர், பிரதமர் பதவியில் உள்ளவர்களை நேரில் அழைத்து விசாரிக்க முடியாது. அவர்களிடம், தகுந்த ஆதாரங்களை அளிக்கும்படியும் கேட்க முடியாது. பொதுக் கணக்குக் குழு தலைவர் விரும்பினால், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசிக்கலாம்.இதுவரை எந்த ஒரு பிரதமருமே, பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்காத சூழலில், தற்போது மன்மோகன் சிங், நேரில் ஆஜராக தயார் என, கடிதம் எழுதியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.



0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts