புதுடில்லி: ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 30 ஆயிரம் கோடி வரை பணத்தில் புரட்டு வேலை காட்டிய காமன்வெல்த் போட்டி குழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கல்மாடி வீட்டில் சி.பி.ஐ., பிரிவினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், மேலும் இன்று ஒரு புதிய எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவும் சி.பி.ஐ., போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இவரது உதவியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கல்மாடியும் கைது செய்யப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியிருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர். இந்த காமன்வெல்த் அரங்கத்தில் போதிய வசதி செய்யப்படவில்லை என பல வெளிநாட்டு வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். விளையாட்டின் ஏற்பாடுகள் பல வகைகளில் பண கையாடல் மற்றும் கான்ட்ராக்ட் பணிகளில் குறிப்பிட்ட தொகை பெற்றது மற்றும் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டதில் பணபரிமாற்றம், தளவாட சாமான்கள் வாங்குவதில் கமிஷன் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கல்மாடி வைக்கப்பட்டன.
இதனையடுத்து காங்கிரஸ் பார்லி., குழு உறுப்பினர் பதவி, ஒருங்கிணைப்பு குழுதலைவர் உள்ளிட்ட பதவியில் இருந்து கல்மாடியை நீக்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது உதவியாளர்களாக இருந்த தர்பாரி, சஞ்சய்மகிந்தேரா, ஜெயச்சந்திரன், ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கல்மாடி மற்றும் இவரது நெருங்கிய வட்டாரங்கள் சிலர் வீடுகள் உள்பட மொத்தம் டில்லி, புனே என 7 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த ரெய்டு வெறும் கண்துடைப்புதான் என பா.ஜ., விமர்சித்துள்ளது. இது காலதாமதமானது, கல்மாடியை இது வரை கைது செய்ய்யாதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
தூக்கில் போடுங்கள் என்றார்: இதற்கிடையில் ஒரு புதிய எப்.ஐ.ஆர்., போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் கல்மாடி கைது செய்யப்படலாம் என்ற டில்லி வட்டார யூகங்கள் தெரிவிக்கிறது.பண ஊழல் நிரூபிக்கபட்டால் என்னை தூக்கில் போடட்டும் என கல்மாடி கூறியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
0 comments :
Post a Comment