""நான் ஓடி ஒளிவதாகவும், ஏதோ சில விஷயங்களை மறைக்க முற்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் என்மீது குற்றம் சாட்டுகின்றன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு முன் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளேன். இது குறித்து விரைவில் அக்குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளேன்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
டில்லியை அடுத்த புராரியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், தவறான பிரசாரத்தை பா.ஜ., மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக என் மீது கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் நான் ஓடி ஒளிவதாகவும், ஏதோ சில விஷயங்களை மறைக்க முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் என் மீது சந்தேகம் கிளப்புகின்றன மற்றும் குற்றம் சாட்டுகின்றன.இந்நாட்டின் பிரதமர் பதவியில் உள்ளேன். மக்களுக்கு பதில் கூற வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது. சீசரின் மனைவி என்பவள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருந்தாக வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு விசாரிக்க முடிவு செய்துள்ளது.அந்த குழு விரும்பினால், தேவைப்பட்டால், பிரதமர் பதவியில் உள்ள நானே அந்த குழு முன்பாக, எப்போது வேண்டுமானாலும் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயார். எனது இந்த முடிவை, பொதுக்கணக்கு குழுவின் தலைவருக்கு தெரிவிக்க, முறைப்படி கடிதம் எழுதவுள்ளேன்.பார்லிமென்டில் கூச்சலும், குழப்பத்தையும் ஏற்படுத்தி முடக்குவதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை பொறுத்தவரை, விசாரணை செய்ய முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவிரமான புலன் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.தப்பிக்க முடியாது: நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு ஒரே சத்தியத்தை இந்நேரத்தில் அளிக்க விரும்புகிறேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தப்பிவிடாதபடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சமூகத்தில் எத்தனை பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது. இதுதான் நடக்கப் போகிறது.ஊழல் குறித்த விஷயங்களை கையாளும்போது, இந்த அரசு சில தவறுகளை செய்திருக்கலாம். சில குறைகளும் இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் அனைத்து விவரங்களையும் ஆராய சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்துள்ளோம்.சி.பி.ஐ., உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் விசாரணையில் இறங்கியுள்ளன. அப்படியிருக்க ஏன் தேவை இல்லாமல் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடிக்கின்றன என்பது தெரியவில்லை.பார்லிமென்ட் ஜனநாயகத்தின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டால், அது மிகப்பெரிய ஆபத்தாக முடியும். தற்போது நாட்டில் நிலவும் பணவீக்கம் கவலையளிப்பதாக தெரிகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது நாட்டின் பணவீக்கம் 7.5 சதவீதமாக உள்ளது. இது மேலும் குறைந்து, வரும் மார்ச்சில் 5.5 சதவீதமாக குறையும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பிரதமர் பேசினார்.
தீர்மானத்தில் இலங்கை விவகாரம் : அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வெளியுறவு சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் இலங்கை விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், "இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில் அங்கு நல்லதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு உரிய அறிகுறிகள் தென்படுகின்றன. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள சிங்கள, தமிழ் மற்றும் சிறுபான்மை இனங்கள் என, அனைத்து தரப்புமே சமமாக மதிக்கப்பட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
எப்போதும் இந்தியா தரப்பில் இலங்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்போது, அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றும்போது, வடக்கு கிழக்கை இணைக்கும் 13வது சட்டத் திருத்தத்தை வலியுறுத்தும் ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறப்படுவதுண்டு.இப்போது அதுபோல அல்லாமல் வெறும் அரசியல் தீர்வு என்றே கூறப்பட்டுள்ளது. தவிர எப்போதுமே இலங்கை குறித்த தீர்மானம் என்றாலே, அதில் தமிழர்கள் பற்றியே இருக்கும். முதன்முறையாக சிங்களர்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல, வெளியுறவு குறித்து பிரதமர் நேற்று பேசும்போது, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் குறித்து பேசினார். இலங்கை குறித்து பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment