திருவனந்தபுரம் : கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன்(92) நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நேரு குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்த கே.கருணாகரன்(92) நேற்று மாலை 5.30 மணிக்கு காலமானார். கடந்த 10ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஐந்து தினங்களுக்கு முன், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று பக்கவாதம் ஏற்பட்டு மூளை பாதிக்கப்பட்டது. அவருக்கு நேற்று காலை டாக்டர்கள் ஸ்கேனிங் எடுத்து பார்த்தனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்த அவர், நேற்று மாலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். அவருக்கு முரளிதரன் என்ற மகனும், பத்மஜா என்ற மகளும் உள்ளனர். கேரளாவில் 1918ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பிறந்த அவர், 1945ம் ஆண்டு திருச்சூர் நகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்று அரசியல் பயணத்தை துவங்கினார். அவர் நான்கு முறை மாநில முதல்வராகவும், ஒரு முறை மத்திய அமைச்சராகவும், எம்.பி.,யாகவும், 28 ஆண்டுகள் திருச்சூர் மாவட்டம் மாளா தொகுதி எம்.எல்.ஏ.,வுமாகவும் பதவி வகித்துள்ளார். அவரது உடலுக்கு, கேரள கவர்னர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
கேரள அரசியலின் சாணக்கியர் கருணாகரன் : கேரளாவின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கருணாகரன் (93) காலமானார். கேரள அரசியலில் "கிங் மேக்கர் என்று புகழப்பட்டவர். இளம் வயதில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றவர். நேரு, இந்திரா மற்றும் ராஜிவ் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர். கண்ணனூரில், 1918 ஜூலை 5ல், ரேமுண்ணி - கல்யாணிக்கு மகனாக கருணாகரன் பிறந்தார். கேரள ஐ.என்.டி.யூ.சி.,யின் தலைவராக பணியாற்றினார். பல முறை கேரள சட்டசபைக்கு தேர்வானார். 1971 முதல் 1977 வரை கேரள உள்துறை அமைச்சராக இருந்தார். கம்யூனிஸ்ட்களுக்கு சவால் விடுக்கும் வகையில், 1970களில் கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணியை துவக்கியவர். எமர்ஜென்சிக்குப் பின் 1977 மார்ச் 25ல் முதல்வர் ஆன கருணாகரனுக்கு, நக்சலைட் அனுதாபியான கோழிக்கோடு மண்டல பொறியியல் கல்லூரி மாணவர் ராஜன், போலீஸ் காவலில் காணாமல் போய், மரணமடைந்த வழக்கில், கேரள ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, பதவியேற்ற மறுமாதமே ராஜினாமா செய்தார். அதன்பின், 1981ல் பதவியேற்ற போது, கேரள காங்கிரஸ் (மாணி) இவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டதால், 1982ல் பதவி விலகினார். அடுத்து நடந்த தேர்தலில் வென்ற அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இம்முறை 1987 வரை பதவியில் நீடித்தார். 1991ல் ராஜிவ் படுகொலைக்குப் பின், தேர்தலில் நாடு முழுவதும் அதிக இடங்களில் காங்., வெற்றி பெற்றது. கருணாகரன் மீண்டும் முதல்வரானார். தேசிய அளவில், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு அப்போது கடும் போட்டி எழுந்தது. சரத்பவார், நரசிம்மராவ், கருணாகரன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் முன் வைக்கப்பட்ட போது, சரத்பவாருக்காக முக்கிய தொழில் அமைப்புகள் ஆதரவளித்தன. எனினும் கருணாகரன் நரசிம்மராவை ஆதரித்ததால் நரசிம்மராவ் பிரதமராக முடிந்தது. இதற்காக ராவ், தன்னிடம் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தார் கருணாகரன். கருணாகரன் முதல்வராக இருந்த போது, 1993 முதல் 1995 வரையான காலத்தில், அந்தோணி தலைமையிலான அதிருப்தி கோஷ்டியினர், கருணாகரனுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அப்போது நரசிம்மராவ் அந்தோணி பிரிவை ஆதரித்ததால், கருணாகரன் 1995 மார்ச் 19ல் பதவி விலக நேரிட்டது. இந்த சம்பவத்தை கருணாகரனால் கடைசி வரை மறக்கவே முடியவில்லை. தன் பதவி இழப்பை தாங்கிக் கொள்ளாத கருணாகரன், நரசிம்மராவ் மீதான, ஹவாலா வழக்கை மத்திய காங். கமிட்டி விவாதிக்க வேண்டும் என்று கோரினார். காங். கட்சியின் சார்பில் தலைவராகவும் பிரதமராகவும் இரு பதவிகளில் ராவ் இருக்கக் கூடாது என, சூரஜ்கந்த் மாநாட்டு தீர்மானத்தை மேற்கோள்காட்டி வலியுறுத்தினார். எனினும் எந்த பதவியிலும் இல்லாத, கருணாகரனால், கடைசிவரை பிரகாசமான அரசியல் வாழ்வுக்கு திரும்ப முடியவில்லை. மூன்று முறை (1995, 1997 மற்றும் 2004) ராஜ்யசபாவுக்கும், இரு முறை (1998, 1999) லோக்சாபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995ல் மத்திய தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
தனக்குப் பின், கேரள காங்கிரஸ் தனது மகன் முரளிதரன் வசம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அது இன்று வரை நடக்கவே இல்லை. 1996 லோக்சபா தேர்தலிலும் முரளிதரனுக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். என்றாலும், முரளிதரன் தேர்தலில் தோற்றதன் மூலம் கருணாகரனின் ஆசையில் பின்னடைவு ஏற்பட்டது. மகனின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு உட்கட்சி துரோகங்களே காரணம் என கடும் குற்றம் சாட்டினார். நீண்ட காலமாக கட்சி அவரை கண்டு கொள்ளவில்லை. கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 2005ல் தேசிய இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியை அவர் துவக்கினார். எனினும், முதுமை காரணத்தினாலும், மக்களிடம் செல்வாக்கு இல்லாத அவரது மகன் மற்றும் மகளால் அக்கட்சியை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், காங்கிரசிலேயே தொடர்வது என்று முடிவு செய்தார். இவரது மகள் பத்மஜாவும் காங்கிரசில் இணைந்தார். மகன் முரளிதரன் தேசியவாத காங்., கட்சியில் தொடர்கிறார். நீண்ட காலம் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த கருணாகரனின் பலமாக அவரது சாதுர்ய அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலின் சாணக்கியத்திலேயே அமைந்திருந்தது. எனினும் கட்சிக்குள் பிரிவுகள் ஏற்படுத்தி அதன் மூலம் தன் அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்து கொண்டவர் என்றும் பலரால் விமர்சிக்கப்பட்டார் கருணாகரன். எனினும் தேசிய காங்கிரஸ் ஒரு சாணக்கிய அரசியல்வாதியை இழந்துவிட்டது.
0 comments :
Post a Comment