background img

புதிய வரவு

இந்தியா சொதப்பல் ஆட்டம்!: தென் ஆப்ரிக்கா அபார பந்துவீச்சு

செஞ்சுரியன்: செஞ்சுரியன் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். சேவக், சச்சின், டிராவிட் அனுபவ வீரர்கள் விரைவில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். வேகத்தில் மிரட்டிய தென் ஆப்ரிக்க பவுலர்கள், விக்கெட் வேட்டை நடத்தினர்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் துவங்கியது.
மழையால் தாமதம்:
பலத்த மழை காரணமாக போட்டி துவங்குவதில் சுமார் நான்கு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. பின் ஒருவழியாக முதல் நாள் ஆட்டம் துவங்கியது.
ஜெய்தேவ் அறிமுகம்:
அனுபவ ஜாகிர் கான்(தொடைப் பகுதியில் பிடிப்பு) இடம் பெறாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இவருக்கு பதில் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் அறிமுக வீரராக இடம் பெற்றார். டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் எதிர்பார்த்தது போல "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சேவக் "டக்':
தென் ஆப்ரிக்க வேகங்கள் "பவுன்சர்'களாக போட்டுத் தாக்க, இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. டெஸ்ட் அரங்கின் "நம்பர்-1' அணி என்பதற்கு ஏற்ப நம்மவர்கள் விளையாடத் தவறினர். பந்துகள் எகிறும் ஆடுகளத்தில், மோசமான "ஷாட்' அடித்து, விக்கெட்டை வீணாக பறிகொடுத்தனர். ஸ்டைன் வீசிய பந்தை தூக்கி அடித்த சேவக் பரிதாபமாக "டக்' அவுட்டானார். பின் காம்பிர், டிராவிட் இணைந்து சிறிது நேரம் போராடினர். ஸ்டைன் வீசிய 5வது ஓவரில் டிராவிட் இரண்டு பவுண்டரி அடித்தார். பல முறை கண்டம் தப்பிய காம்பிர்(5), மார்கல் பந்தில் சிக்கினார். அதே மார்கல் வேகத்தில் டிராவிட்டும்(14) சரணடைந்தார். அப்போது இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 27 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது.
சச்சின் அதிரடி:
டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடிக்கும் நெருக்கடியுடன் களமிறங்கினார் சச்சின். இவர் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆடி வியப்பு அளித்தார். டிசோட்சபே ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசி அசத்தினார். காலிஸ் பந்திலும் ஒரு பவுண்டரி பறக்க விட்டார். இவருக்கு ஒத்துழைப்பு அளித்த லட்சுமண், ஹாரிஸ் பந்தில் பவுண்டரி அடித்தார்.
விக்கெட் மடமட:
இதற்கு பின் இந்தியாவின் நிலைமை மோசமடைந்தது. தூணாக நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட லட்சுமண்(7), ஸ்டைன் பந்தில் போல்டாகி ஏமாற்றினார். இளம் சுரேஷ் ரெய்னா(1), காலிஸ் பந்தில் வீழ்ந்தார். இந்த நேரத்தில் இன்னொரு பேரதிர்ச்சி அளித்தார் ஸ்டைன். இவரது வேகத்தில் சச்சின்(36) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நொந்து போயினர்.
ஹர்பஜன் ஆறுதல்:
அடுத்து வந்த ஹர்பஜன் டிசோட்சபே ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அசத்தினார். இவர் ஒரு ரன்னுக்காக ஓடும் போது, கையில் இருந்து பேட் நழுவி விட்டது. இதனை அறிந்த தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் பவுச்சர் பந்தை சாதுர்யமாக த்ரோ செய்ய ஹர்பஜன்(27) பரிதாபமாக ரன் அவுட்டானார். இஷாந்த்(0), ஸ்ரீசாந்த்(0) தாக்குப்பிடிக்கவில்லை.
தோனி முயற்சி:
கடைசி கட்டத்தில் தனிநபராக போராடிய தோனி முடிந்த அளவுக்கு ரன் சேர்க்க முயற்சித்தார். டிசோட்சபே ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். மைதானத்தில் ஒளிவிளக்குகள் பயன்படுத்தியும் போதிய வெளிச்சம் காணப்படவில்லை. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. தோனி(33), உனத்கட்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.
தென் ஆப்ரிக்க தரப்பில் மார்கல் 4, ஸ்டைன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

டிராவிட் முன்னேற்றம்
நேற்றைய போட்டியில், இந்திய வீரர் டிராவிட் 11 ரன்கள் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியில், வெஸ்ட் இண்டீசின் லாராவை (11953 ரன்) பின்னுக்குத் தள்ளி 3 வது இடத்துக்கு முன்னேறினார். இதுவரை 148 போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட், 11957 ரன்கள் குவித்துள்ளார். இப்பட்டியலில் "டாப்-5' வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம் அரைசதம்
சச்சின் (இந்தியா) 175 14402 49 59
பாண்டிங் (ஆஸி.,) 151 12332 39 56
டிராவிட் (இந்தியா) 148 11957 31 59
லாரா (வெ.இண்டீஸ்) 131 11953 34 48
காலிஸ் (தென் ஆப்ரிக்கா) 143 11449 37 54
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா
காம்பிர்(கே)ஹாரிஸ்(ப)மார்கல் 5(43)
சேவக்(கே)ஆம்லா(ப)ஸ்டைன் 0(3)
டிராவிட் எல்.பி.டபிள்யு.,(ப)மார்கல் 14(42)
சச்சின் எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்டைன் 36(34)
லட்சுமண்(ப)ஸ்டைன் 7(20)
ரெய்னா(கே)பிரின்ஸ்(ப)காலிஸ் 1(3)
தோனி--அவுட் இல்லை- 33(47)
ஹர்பஜன்-ரன் அவுட்-(பீட்டர்சன்/பவுச்சர்) 27(25)
இஷாந்த்(கே)காலிஸ்(ப)மார்கல் 0(2)
ஸ்ரீசாந்த்(கே)ஸ்டைன்(ப)மார்கல் 0(8)
உனத்கட்-அவுட் இல்லை- 1(5)
உதிரிகள் 12
மொத்தம்(38.1 ஓவரில் 9 விக்.,) 136
விக்கெட் வீழ்ச்சி: 1-1(சேவக்), 2-24(காம்பிர்), 3-27(டிராவிட்), 4-66(லட்சுமண்), 5-67(ரெய்னா), 6-71(சச்சின்), 7-110(ஹர்பஜன்), 8-110(இஷாந்த்), 9-116(ஸ்ரீசாந்த்).
பந்துவீச்சு: ஸ்டைன் 10-1-34-3, மார்கல் 12.1-5-20-4, டிசோட்சபே 9-2-50-0, காலிஸ் 6-1-20-1, ஹாரிஸ் 1-0-6-0.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts