background img

புதிய வரவு

முல்லை பெரியாறு பிரச்னையில் கேரள அரசின் நாடகம் : ஐவர் குழு ஆய்வில் உண்மை நிலை இன்று தெரியும்

கூடலூர் : தென்மாவட்ட விவசாயிகளின் ஜீவ நாடி பிரச்னையான முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பின்னரும் நீர்மட்டத்தை உயர்த்தாமல் தடுக்க பல்வேறு முட்டுக்கட்டைகளை கேரள அரசு செய்து வருகிறது.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஐவர் குழு, பெரியாறு அணையில் தொழில்நுட்ப ஆய்வை இன்று மேற்கொள்கிறது. கேரள அரசின் நாடகம் குறித்த உண்மை நிலை இன்றைய ஆய்வில் தெரியவரும்.


கேரள அரசின் பிடிவாதம்: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தமிழகம், கேரளாவுக்கு இடையே, 1979ல் துவங்கியது. அணை பலமிழந்து விட்டதாக கேரள அரசு கூறிய புகாரைத் தொடர்ந்து, தமிழக அரசு, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணையைப் பலப்படுத்தியது.பணி முடிந்த பின்பும் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்காமல் கேரள அரசு பிடிவாதம் செய்ததால் விவசாயிகளும், தமிழக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து விவாதங்கள் மற்றும் நிபுணர் குழு அறிக்கையை தீர ஆய்ந்து அணையின் நீர்மட்டத்தை, 136ல் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என, சுப்ரீம் கோர்ட், 2006 பிப்., 27ல் தீர்ப்பு வழங்கியது.ஆனால், சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பையும் அமல்படுத்த விடாமல் கேரள அரசு பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட்டும், கேரள மக்களை பயமுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.


தீர்ப்புக்கு பின் கேரள அரசின் செயல்பாடு: பெரியாறு அணையின் கட்டுப்பாட்டை தம்வசம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் விதிமுறை மீறி 2006 மார்ச் 15ல், கேரள சட்டசபையில் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது.
* அணையில் இருந்து 17 கி.மீ., தொலைவில், 2.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் அணையில் நீர்க்கசிவு அதிகரித்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்தது. ஆனால், அந்த நேரங்களில் அணை அருகே நிலநடுக்கமே ஏற்படவில்லை என, ஆய்வு மைய இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இதையும் பொருட்படுத்தாத கேரள அரசு, அதே ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் கேரள பொதுப்பணித்துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு, மனுக்கள் குழு, வனத்துறை அமைச்சர்கள் என நீர்க்கசிவு குறித்து அணையை ஆய்வு செய்து பிரச்னையை பெரிதுபடுத்தினர்.
* 2006 நவம்பரில் கொச்சியில் இருந்து 17 கடற்படை வீரர்களை அழைத்து வந்து அணையில் அடித்தளத்தை ஆய்வு செய்ய கேரள அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். எவ்வித அனுமதியுமின்றி கேரள மக்களை பயமுறுத்தும் விதத்தில் நடக்க இருந்த இந்த நடவடிக்கைகள், தமிழக அரசால் அப்போது தடுத்து நிறுத்தப்பட்டது.
* அதன்பின் பெரியாறு அணை அருகே புதிய அணையை கட்டியே தீர வேண்டும் எனக்கூறிய கேரள அரசு, 2007 நவம்பரில் குமுளியில் அதற்கான கட்டுப்பாடு அலுவலகத்தையும் திறந்து அதிகாரிகளையும் நியமித்தது.
* மத்திய வன அமைச்சகத்தின் எவ்வித அனுமதியுமின்றி அணையில் இருந்து, 300 மீட்டர் தூரத்தில் புதிய அணை கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சர்வே பணிகளையும் கேரள அரசு மேற்கொண்டது.
* வன அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெறாமல் ஒரு சிறு செடியைக்கூடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து அகற்ற முடியாது. ஆனால், கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கையால் அப்பகுதியில் சர்வே பணிகளை செய்தது. மேலும், 15 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து மண் மற்றும் பாறையின் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்களிடம் பீதியை ஏற்படுத்த "சிடி' : * அணை உடைவது போன்றும், அதனால் வெளியேறும் வெள்ளத்தால் கேரள மக்கள் பலர் பலியாவது போன்றும் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை உருவாக்கி, அதை, இடுக்கி மாவட்டத்தில் கேபிள் "டிவி' களில் ஒளிபரப்பினர்.
* கேரள மக்களை பயமுறுத்தும் விதத்தில் கேரள அரசின் இந்த செயல்பாடு இருந்தது. இது மட்டுமின்றி பெரியாறு அணை மழை நேரங்களில் 130 அடியைக் கடக்கும் போது, அணைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை உயரமான இடங்களில் வசிக்க அறிவுறுத்தி பொதுமக்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.
* இத்தனையையும் செய்து வரும் கேரள அரசு, படகு சவாரியை மட்டும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரியாறு அணைப் பிரச்னை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருந்த போதிலும், கேரள அரசு தங்களது பாணியில் கேரள மக்களை பயமுறுத்தி வந்தது.


ஐவர் குழு இன்று ஆய்வு : சுப்ரீம் கோர்ட், ஐவர் குழுவை நியமித்து, அக்குழு இன்று அணையை ஆய்வு செய்ய உள்ளது. இக்குழு வர உள்ள நிலையில், அணை உடைவது போன்று தனியார் ஒருவர் தயாரித்த "சிடி'யை திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் வெளியிட்டு, அணைப் பிரச்னை முடிவுக்கு வராமல் தடுக்கும் நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார்.ஐவர் குழு அணையை ஆய்வு செய்து, அதற்கான முழு விவரங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன், கேரள அரசின் செயல்பாடுகள், தமிழக விவசாயிகளை கலக்கமடையச் செய்துள்ளது.


விவசாயிகளின் கருத்து : கே.எம்.அப்பாஸ் (ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க செயலர்): சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த ஐவர் குழு முடிவை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவிடும். இதனால், இரு மாநிலங்களுக்கும் நல்ல உறவு பாதிக்கப்படும்.


ஏ.ஆர்.சுகுமாறன் (கம்பம் விவசாயிகள் சங்க செயலர்): பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது. கேரளா போல் சுறுசுறுப்புடன் செயல்படவில்லை. கேரளாவில் பொதுமக்களின் கருத்தை அறிந்து முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றனர். தமிழகத்தில் அப்படியில்லை. தற்போது வந்துள்ள ஐவர் குழு இதன் முழு உண்மைகளை அறிந்து செயல்பட வேண்டும்.


ஓ.ஆர்.நாராயணன் (உத்தமபுரம் விவசாயிகள் சங்க செயலர்): தற்போது வந்துள்ள ஐவர் குழுவில் இரு மாநிலம் சார்பிலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளனர். எனவே, இதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் இனிமேல் கொடுக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கே.சி.ஆறுமுகம் (லோயர்கேம்ப் பசுமை இயக்க தலைவர்): பெரியாறு அணை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய கேரள அரசு வலியுறுத்தினால், தமிழகம் மீண்டும் பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். இந்த இரு தாலுகாக்களும் முன்பு இருந்தது போல் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டால் பிரச்னை எளிதில் முடிவுக்கு வந்து விடும்.பெரியாறு அணை பிரச்னையை இரு மாநில எல்லை பிரச்னையாக பார்க்காமல், விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு குழு ஆய்வு செய்ய வேண்டும் என்பதே, 1.45 லட்சம் ஏக்கர் பாசன விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.


பெரியாறு அணையை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் குழு வருகை: தேனியில் ஆய்வு கூட்டம் ரத்து : முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து, அணைகள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு சட்டத்தில் கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, கோர்ட் உத்தரவை வலுவிழக்க செய்தனர்.இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, சுப்ரீம் கோர்ட், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைத்தது.இக்குழுவினர் அணையை ஆய்வு செய்ய செல்லும் வழியில் நேற்று தேனி வந்தனர். நீதிபதி ஆனந்த் மற்றும் குழு உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், டி.கே.மேக்தா, முன்னாள் மத்திய நீர்வள ஆணைய செயலர் சி.டி.தத்தே ஆகியோரை தேனி கலெக்டர் முத்துவீரன், மதுரை கலெக்டர் காமராஜ் வரவேற்றனர்.


மதிய உணவுக்கு பின் நீதிபதிகள் குழு தேக்கடி புறப்பட்டு சென்றது. தேக்கடியில் இரவு ஓய்வுக்கு பின் இன்று காலை அணையின் பாதுகாப்பு குறித்து நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் அணையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.இதற்காக இருமாநில அரசு தொழில்நுட்ப வல்லுனர்கள், வக்கீல்கள், உயர் அதிகாரிகள் உடன் வந்துள்ளனர்.


தேனியில் ஐவர் குழு கூட்டம் ரத்து :கேரள அதிகாரிகளுக்கு "டோஸ்' : ஐவர் குழுவினர், தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்துவதாக இருந்தது.குழு உறுப்பினர்களின் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த கே.டி.தாமஸ் வரவில்லை. இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.குழு தலைவர் ஆனந்திடம், கேரள அரசின் சார்பு செயலர் ஜெயக்குமார், ""குழு உறுப்பினர் கே.டி.தாமஸ் பெரியாறு பவர்ஹவுசில் காத்திருக்கிறார். அங்கு சென்று பார்வையிட்டு செல்லலாம்,'' என்றார்.இதில் கோபமடைந்த நீதிபதி ஆனந்த், ""நீங்கள் எனக்கு ஆலோசனை கூற வேண்டாம். நான்தான் கமிட்டி தலைவர், எனக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. அணை பலமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வது மட்டுமே குழுவின் பணி. திட்டமிட்டபடி ஷெட்யூல் என்னிடம் உள்ளது. என்னை யாரும் திசை திருப்ப வேண்டாம்,'' என கூறினார். குழுவுடன் தாமஸ் வராதது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts