background img

புதிய வரவு

டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு?

புது தில்லி, மே 4: டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு டீசல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு பெற்ற பெட்ரோல் விலையும் இதற்கேற்ப உயரும் என்று தெரிகிறது.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் அளிக்கும் குழு உறுப்பினர்கள் இம்மாதம் 11-ம் தேதி தில்லியில் கூடி டீசல் விலை உயர்வை இறுதி செய்வர் என்று தெரிகிறது.
சட்டப்பேரவை தேர்தலில் கடைசி கட்ட வாக்குப் பதிவு இம்மாதம் 10-ம் தேதி நடைபெறுகின்றன. இதற்குப் பிறகு 11-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விலை உயர்வு குறித்த முடிவு எடுக்கப்பட உள்ளது.
பெட்ரோலிய பொருள்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததாகத் தெரிகிறது.
டீசல் விற்பனையால் லிட்டருக்கு ரூ. 16.17-ம், கெரசின் விற்பனையால் லிட்டருக்கு ரூ. 29.69-ம், சமையல் எரிவாயு விற்பனையால் சிலிண்டருக்கு ரூ. 329.73-ம் நஷ்டம் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் மத்திய அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு நடப்பு நிதி ஆண்டில் ஏற்படும் இழப்பு ரூ. 1,80,208 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ரூ. 540 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 147 டாலராக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் இப்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ. 8.50 நஷ்டம் ஏற்படுகிறது.
பெட்ரோலியப் பொருள்கள் மீதான சுங்க வரி மற்றும் உற்பத்தி வரியைக் குறைக்க மத்திய நிதி அமைச்சர் மறுத்துவிட்டார். இதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது.
புதிய செயலர்: பெட்ரோலியத் துறையின் புதிய செயலராக கிரிஷ் சந்திர சதுர்வேதி பொறுப்பேற்றுள்ளார். ஏற்கெனவே இத்துறை செயலராக இருந்த எஸ். சுந்தரேசன், மத்திய கனரக தொழில்துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts