background img

புதிய வரவு

கவர்னர் மாளிகையில் விழா: கேரள முதல்-மந்திரியாக உம்மன்சாண்டி இன்று பதவி ஏற்பு; மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கு 6 இடம்

கேரளா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி இன்று உம்மன்சாண்டி தலைமையில் ஆட்சி அமைக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி உம்மன் சாண்டிக்கு கவர்னர் கவாய் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

முதல் கட்டமாக உம்மன் சாண்டியுடன் கூட்டணி கட்சியான கேரள காங்கிரசைச் சேர்ந்த மானி நிதிதுறை மந்திரியாகவும், ஜோசப் நீர் வளத்துறை மந்திரியாகவும் பதவி ஏற்கிறார்கள். முஸ்லிம் லீக் கட்சி குஞ்சாலிகுட்டிக்கு விவசாய துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சோசலிஸ்டு ஜனதா கட்சியைச் சேர்ந்த மோகனன் தொழில் வள மந்திரியாகிறார். கேரள காங்கிரஸ்(ஜே) கட்சியைச் சேர்ந்த ஜேக்கப்புக்கு உணவு துறையும், சிபுபேபிஜானுக்கு தொழிலாளர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கணேஷ்குமார் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இலாகாவுக்கு மந்திரியாக பொறுப்பேற்கிறார். உம்மன்சாண்டியுடன் இவர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். இதையடுத்து காங்கிரசைச் சேர்ந்த திருவாஞ்சூர் ராதா கிருஷ்ணன் ஆரியாடம் பீர்முகமது, ஜோசப், சிவக் குமார், அடூர் சுரேஷ், பாலகிருஷ்ணன், கெங்காதரன், தீரன்பிரதா பன் ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது.

முதல்-மந்திரி பதவி ஏற்ற பின்பு உம்மன்சாண்டியும், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் அமைச்சர்கள் பட்டியலுடன் நாளை டெல்லி செல்கிறார்கள். அங்கு சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி மந்திரிகள் பட்டியலை இறுதி செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து வருகிற 23-ந்தேதி நடைபெறும் விழாவில் காங்கிரசைச் சேர்ந்த 9 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts