நாடாளுமன்ற, சட்டமன்ற பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்தவேண்டிய டெபாசிட் தொகையை உயர்த்திய சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மாங்குன்றைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.முருகேந்திரன் தாக்கல் செய்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்தவேண்டிய டெபாசிட் தொகை பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. சட்டமன்ற பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ரூ.5 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் என்றால் ரூ.2,500ம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த சட்டத்தில் 2009ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்த தொகை முறையே ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என்று உயர்த்தப்பட்டது. அதுபோல் நாடாளுமன்ற உறுப்பினருக்கான டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் என்றும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500 என்றும் உயர்த்தப்பட்டுவிட்டது.
இது அடிப்படை உரிமையை மீறிய செயலாகும். உரிமையை மீறி நடத்தும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் இருக்காது. தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளவர்கூட டெபாசிட் தொகை உயர்வால் போட்டியிட தயங்குவார். இளைஞர்களை தேர்தலில் பங்கேற்க இந்த சட்டத் திருத்தம் தடையாக இருக்கும். எனவே இந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும்வரை பழைய தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி, இது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி மத்திய சட்டத்துறை, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment