background img

புதிய வரவு

தவறுகளை சுட்டிக் காட்டுவோம்: வைகோ ஆவேசம்

ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. மாவட்டச் செயலர்கள் சிலர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட மாவட்டச் செயலர்களில் மணச்சநல்லூர் நடராஜன் மட்டுமே ஆவேசமாக பேசினார். அவர் பேசும் போது, "பொடாவில் கைது செய்யப்பட்டு தியாகிகளானோம். தேர்தலை புறக்கணித்ததன் மூலம், 15 எம்.எல். ஏ.,க்களை இழந்து, தியாகிகளாகி உள்ளோம். மற்ற கட்சிகளில் ஒன்றிய செயலர், நகர செயலர் போன்றவர்கள் தான் புதிய உறுப்பினர்களை சேர்ப்பார்கள். ஆனால், நமது கட்சியில் மாவட்டச் செயலர்களே பொறுப்பேற்க வேண்டியதுள்ளது. தற்போது தொண்டர்கள் சோர்வாக உள்ளனர். அவர்களிடம் 500 ரூபாய் பெற்று ஆயுள் உறுப்பினர்களாக சேர்ப்பது கூட கடினமான காரியம்' என்றார். மற்றொரு மாநில நிர்வாகி பேசும் போது, "வரும் பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். பா.ஜ., வெற்றி பெறும். அப்போது நாம் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என்றார்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: தேர்தல் முடிவு எதிர்பார்க்காத ஒன்று தான். தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நடந்த ரகளை பற்றி அனைவருக்கும் தெரியும். நமது கட்சியில் அப்படியொரு வன்முறை சம்பவத்திற்கு யாரும் இடம் கொடுக்கவில்லை. ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. அனைவரது மனதிலும் ஊமை காயம் உள்ளது. ஆனால், அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. கடந்த ஐந்தாண்டு காலமாக தி.மு.க., அரசை கடுமையாக நாம் எதிர்த்தோம். அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இனி நாம் தி.மு.க., தலைவரை விமர்சிக்க வேண்டியது இல்லை. அதேபோல் முதல்வரையும் நாம் விமர்சிக்க வேண்டாம்.

கடந்த ஐந்தாண்டுகளாக நாம், அ.தி.மு.க.,வுக்கு உறுதுணையாக இருந்தோம். முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு கூட எனக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்துள்ளனர். நான் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தேன். வீட்டின் வேலைக்கார பெண் தான் அழைப்பிதழை பெற்றுள்ளார். பதவி ஏற்பு விழாவில் முதல் வரிசையில் உட்காருவதற்கு தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தி.மு.க., - அ.தி.மு.க.,வை சரிசமமாக பாவிக்க வேண்டும். ஆளுங்கட்சி தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் எனக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அவரது மகள் படிக்கும் கல்லூரியில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். என் பெயரை 80 சதவீதம் மாணவியர் தெரிவித்துள்ளதாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால் என்னை அடுத்த முதல்வராக நினைத்து வெளியே பேச வேண்டாம். உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த மாவட்டங்களின் சூழ்நிலையை பொறுத்து, அப்போது முடிவு எடுக்கலாம். தேர்தல் முடிவை, இணையதளம் மூலம் இளைஞர்கள் பலர் பாராட்டியுள்ளனர். நமக்கு நல்லதொரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts