background img

புதிய வரவு

பின்லேடனுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் உதவினரா? விசாரணை தேவை-ஒபாமா

வாஷிங்டன், மே 9: அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள் யார்? விசாரணை நடத்தி அவர்களை கண்டுபிடித்துக் கூறுங்கள் என்று பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தை பாகிஸ்தான் விசாரிக்கிறது என்று விட்டுவிடமாட்டோம். உண்மை தெரியும்வரை நாங்களும் விசாரிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் கோபுரத்தை தகர்த்த பின்லேடன் கொல்லப்பட்டதால் அமெரிக்காவே பூரிப்பில் உள்ளது. அதிபர் ஒபாமாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து ஒபாமா திங்கள்கிழமை ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்தடவையாகப் பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போதுதான் பாகிஸ்தானில் ஆதரவு கிடைக்காமல் பின்லேடன் அங்கு வசித்திருக்க முடியாது என்று குற்றம்சுமத்தினார்.
மேலும் அவர் கூறியது: நாங்கள் வலைவீசித் தேடிவந்த பயங்கரவாதி பாகிஸ்தான் மண்ணில்தான் இருந்துள்ளார். அதுவும் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து குறைந்த தொலைவில் ராணுவ மையம் அருகிலேயே துணிச்சலாக வசித்து வந்துள்ளார். இது எப்படி சாத்தியம்? பாகிஸ்தானில் யாருடைய ஆதரவும், உதவியும் இல்லாமல் பின்லேடனால் அங்கு வசித்திருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அவருக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரிகளோ, அரசுக்கு வெளியில் உள்ளவர்களோ ஆதரவுக் கரம் நீட்டியிருக்க வேண்டும். அவருக்கு வேண்டிய உதவியை செய்திருக்க வேண்டும். அவருடைய அந்த நலவிரும்பிகள் யார் என்பது அமெரிக்காவுக்கு நிச்சயம் தெரிந்தாக வேண்டும்.
இந்த விஷயத்தை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இதுதான் அமெரிக்காவின் விருப்பம்.
பின்லேடன் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சூழலால் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு அளித்த ஒத்துழைப்பையும், உதவியையும் மறந்திட முடியாது. இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதில் இருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு சிறந்தவகையில் ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரானப் போரை பொறுத்தவரை பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே அமெரிக்கா மெச்சும் வகையில் நடவடிக்கையை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் உலா வந்த ஏராளமான பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியுள்ளது. இது, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு இல்லாமல் நிச்சயம் சாத்தியமாயிருக்காது.
இந்தத் தருணம் இரு நாடுகளுக்குமே முக்கியமானது. பாகிஸ்தானுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே விரிசல் உருவாகக் கூடாது என்றே அமெரிக்கா விரும்புகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த காலத்தைவிட வருங்காலத்தில்தான் நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் பயங்கரவாதமே முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது. அல்லது அல்-காய்தா அழிக்கப்பட்டுவிட்டதாகவும் நினைக்க முடியாது. பின்லேடன் வீழ்த்தப்பட்டதன் மூலம் அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். குறைந்தபட்சம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் வேரூன்றியுள்ள அல்-காய்தா அமைப்பை அடியோடு அழிக்க முயற்சிக்க வேண்டும்.
பின்லேடனை கொன்றது மிகப் பெரிய வெற்றிதான் என்பதையும் மறுக்க முடியாது. அவரைக் கொல்ல அமெரிக்க கமாண்டோ வீரர்களின் 40 நிமிடப் போராட்டம் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது. பின்லேடனை தீர்த்துக்கட்ட கமாண்டோ வீரர்கள் போராடிய போது எனக்குப் பதற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ, அடுத்து என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சி கேள்வி என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது. அந்த 40 நிமிடமே என் வாழ்வின் நீண்ட 40 நிமிடம் என்றார் ஒபாமா.
ஒபாமா பாகிஸ்தான் செல்ல மாட்டார்-அமெரிக்கா: இப்போதைய சூழலில் அதிபர் ஒபாமா பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த ஆண்டு பாகிஸ்தான் செல்லுவார் என்று கூறப்பட்டது. இதை பாகிஸ்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் இருந்தது அம்பலமானதால் இரு நாடுகளின உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு செல்ல ஒபாமா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் பின்லேடன் விவகாரத்தையும், ஒபாமா பயண ரத்தையும் அமெரிக்கா தொடர்புபடுத்தவில்லை. சூழலையே காரணம் காட்டியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts