background img

புதிய வரவு

பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், அதிமுக பொதுச்செயலர் ஜெயலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-


மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் திருநாளில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன். இத்திருநாள் அனைத்து பிரிவினரையும் அன்பால் இணைத்து நாட்டு முன்னேற்த்திற்கு உழைக்க உற்சாகம் அளிக்கட்டும்.


துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-


மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் பல விதமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாள் மக்கள் அனைவருக்கும் வளமான, மகிழ்ச்சியான வாழ்வை வழங்க வாழ்த்துகிறேன்.


அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி:


அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாட இருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


உழைப்பை அறுவடை செய்து, செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், பலன் பெறக் காரணமாக இருந்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி நவிலும் விழா பொங்கல் பெருவிழா. சாதி மத வேறுபாடு இன்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் அனைவராலும் கொண்டாடப்படும் விழா தமிழர் திருவிழாவான பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழரின் தன்மானம் தனித் தன்மையோடு திகழ, தமிழர் தம் வாழ்வில் வளம் பெற்றிட, சர்வாதிகார ஆட்சி ஒழிந்து மக்களாட்சி மலர, தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வழி வகுக்க வேண்டும் என்று தெரிவித்து, உங்கள் அனைவரது இல்லங்களிலும் அன்பும், அமைதியும், செல்வமும், மகிழ்வும் பால் போல் பொங்கி வழிய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.


மதிமுக பொதுச் செயலர் வைகோ:


உழைப்பின் அறுவடையில் களிப்புறும் திருநாள்தான் பொங்கல் விழா! காடு கழனிகளில் சிந்திய வியர்வைத் துளிகளில் விளைந்து பொலிந்திடும் புது வரவுகளின் எண்ணிக்கையில் ஏற்றம் பெற்று மகிழ்ந்திடும் பொன்னாளாம் பொங்கல் திருநாள். இன்பத் திருநாளாம் இனிய பொங்கல் புதுநாளில் கொடிய ஆட்சியை மாற்றிடச் சூளுரை ஏற்போம் சுயமரியாதையோடு வாழ்வோம். பொல்லாத ஆட்சியை வேரோடு சாய்த்திட ஒன்றுபடுவோம். அதுவே நாம் கொண்டாடும் பொங்கல் விழாவுக்குப் பெருமை சேர்த்திடும் ஒரே வழி என உறுதி கொள்வோம்.


இன்றைய ஆட்சியாளர்களின் இலவசங்களுக்காக ஆசைப்பட்டு, ஐந்தாண்டுக் காலத்தை அடமானம் வைத்துவிடக் கூடாது என்கிற உறுதிமொழியை - பொங்கல் வாழ்த்தாக ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம். இந்தப் பொங்கல் விழா, தமிழர்தம் வாழ்வில் வளம் குவிக்கும் ஆண்டுக்கு வழிகாட்டும் விழாவாக மலரும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்ப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு:


தமிழினத்தின் பாரம்பரிய திருவிழா பண்டிகையான தைப் பொங்கல் திருநாள் உலகெலாம் வாழும் கோடான கோடி தமிழர்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் கொண்டாடி மகிழும் இனிய இப்பொங்கலின் இன்பம் இனிவரும் காலங்களிலும் தொடரவும் வேண்டுமென "பொங்கலோ பொங்கல்" என்ற ஆனந்த முழக்கம் தமிழ் மண்ணிலும், உலகளாவிய தமிழர் மனதிலும் ஒலிக்கட்டும். இல்லாமை, அறியாமை, ஏழ்மை முழுமையாய் அகலட்டும் செழுமை, ஒற்றுமை ஒருமைப்பாடு மேலும் உயரட்டும். தமிழ் மக்கள் மற்றும் தமிழகத்தில் வாழும் இன்னபிற மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது இனிய பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்.




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன்:


பூமிப்பரப்பின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" என்பது வள்ளுவர் வாய்மொழி. உழவை, உழவர்களை, உழைப்பை கொண்டாடும் திருநாளே பொங்கல் நன்னாள். உலகின் பல்வேறு பகுதிகளில் அறுவடைத் திருநாள் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டாலும், தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளை உலகிற்கு பறைசாற்றும் நாளாகவும் பொங்கல்நாள் விளங்குகிறது. பொங்கல் திருநாள் என்பதே ஒற்றுமையின் வெளிப்பாடாகும். மதவெறி, ஜாதிவெறி சக்திகளை முறியடித்து, மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்க உறுதியேற்கும் நாளாக இப்பொங்கல் திருநாள் அமையட்டும். ஏமாற்றங்களையே சந்தித்துவரும் தமிழ் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் காண மாற்றங்கள் உருவாகும் ஆண்டாக தை முதல் நாள் துவங்கும் தமிழ் புத்தாண்டு அமையட்டும்.


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:


ஆளுக்கொரு காணி நிலம் அடைந்திட வேண்டும்
அதன் நடுவே கேணியொன்று அமைந்திட வேண்டும்
காளை பூட்டி ஏறுழுது பயிரிட வேண்டும்
வாழையுடன் நெல், கரும்பு விளைந்திட வேண்டும்
வறுமையுடன் பசிப் பிணியும் ஒழிந்திட வேண்டும்
ஏழைகளே எவருமில்லை எனும் நிலை வேண்டும்
மாளிகையாய் குடிசையெலாம் மலர்ந்திட வேண்டும்
மனைகள்தோறும் பொங்கலிட்டு மகிழ்ந்திட வேண்டும்.


இவ்வாறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts