background img

புதிய வரவு

திகார் ஜெயிலில் கனிமொழி அடைப்பு: நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு; தி.மு.க,அதிர்ச்சி

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா கோர்ட்டில் முன்னதாக வைக்கப்பட்டார்.

 தொடர்ந்து அவர் பலத்த போலீஸ பாதுகாப்புடன் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜெயில் எண் 6 ல் அடைக்கப்பட்டார். இவரை மீண்டு் நாளை காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஓ.பி.,சைனி கூறியுள்ளார். தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி ரிமாண்ட் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் சிக்கிய மாஜி அமைச்சர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஆதாயம் அடைந்த டி.பி., ரியாலிட்டி குழுமத்தின் சினியுக் என்ற நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். கனிமொழி கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார் ஆனால் அன்று உத்தரவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இருப்பினும் கோர்ட்டில் தினமும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கனிமொழியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மனு மீதான தீர்ப்பை அறிவித்தார். கூட்டுச்சதியாளராக கருதப்படும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என கைவிரித்து விட்டார். இதனையடுத்து கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


நீதிபதி சொல்லியிருப்பது என்ன? : இன்றைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் நீதிபதி ஓ.பி., சைனி கூறியிருப்பதாவது: கனிமொழிக்கு ஜாமின் கொடுக்க இயலாது, காரணம் இவர் புரிந்துள்ள குற்றம் மிக பெரிய அளவிலானது. இவர் மீதான குற்ற முக்கியத்துவம் அடிப்படையில் இவர் பெண் என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்பதை பரிசீலனையில் எடுத்துக்கொள்ள முடியாது. இத்துடன் இந்த வழக்சில் சம்பந்தப்பட்ட யாருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை. எனவே இந்த தருணத்தில் இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. மேலும் இவர் உடனடியாக கைது செய்யப்பட்டு நாளை காலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

“ ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கனி” : சி.பி.ஐ.,வக்கீல் வாதம் ; ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று சி.பி.ஐ.,வக்கீல் யு.யு., லலித் வாதாடினார். மேலும் அவர் வாதாடுகையில் , கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியின் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்டார் என்றும், கலைஞர் டி.வி., துவங்கும் நேரத்தில் ராஜாவுடன் நெருக்கமாக இருந்தார். நெருக்கமாக இருந்ததால் கலைஞர் டி.வி.,க்கு எவ்வித ஆவணமும் இல்லாமல் ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் பெற்ற டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் மூலம் எளிதாக ரூ. 214 கோடி கைமாறியது. இதில் இருவரது பங்கும் இருந்தது என்றும் இதனால் கனிமொழியை ஜாமினில் விடக்கூடாது நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் .

கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட பணிகள் அனைத்தும் கனிமொழிக்கு தெரியும் . ராஜாவுடன் நெருக்கமாக இருந்ததால் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் பணம் கலைஞர் டி.வி., க்கு பரிமாற்றம் நடந்திருக்கிறது. கனிமொழியும் இந்த சதியில் பங்கு கொண்டவர் . இவர் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.,க்கு தொடர்பில்லை என்றும் பணம் பரிவர்த்தனை நேர்மையாக நடந்தது என்பதும் நம்ப முடியாததாகவே உள்ளது. எனவே கனிமொழியை ஜாமினில் விட முடியாது என்றார்.

“ முழுச்சதிக்கும் ராஜாதான் காரணம் ”; கனிமொழி வக்கீல் சொன்னது: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம் என்றும், இதில் கனிமொழிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி கோர்ட்டில் தெரிவித்தார். கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவர் வாதாடுகையில்; இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு 20 சதவீத பங்குதாரர் மட்டுமே .கருணாநிதியின் மகளாக பிறந்ததும், எம்.பி.,யாக இருப்பதும்தான் இவரது துரதிருஷ்டம் நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார். பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டும் பயனில்லாமல் போனது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி கைது வரை

2011 பிப். 2: "2ஜி' வழக்கு தொடர்பாக ராஜா, அவரது முன்னாள் தனி செயலாளர் சந்தோலியா மற்றும் முன்னாள் தகவல் தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் சி.பி.ஐ.,யால் கைது. அனைவரும் சி.பி.ஐ., காவலில் அடைப்பு.
2011 பிப். 8: ராஜாவுக்கு மேலும் 2 நாள் சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு. பெகுரா, சந்தோலியா கோர்ட் காவலில் சிறையில் அடைப்பு.
பிப். 8: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர், சாகித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ.,யால் கைது.
பிப். 10: ராஜாவின் சி.பி.ஐ., காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு.
பிப். 14: ராஜா சி.பி.ஐ., காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு, உஸ்மான் பல்வாவுக்கு சி.பி.ஐ., காவல் 4 நாட்கள் நீட்டிப்பு.
பிப். 17: ராஜா, திகார் சிறையில் அடைப்பு.
பிப். 18: பல்வா, சிறையில் அடைப்பு.
பிப். 24: பல்வா, "கலைஞர் டிவி' க்கு சலுகைகாட்டினார் என டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்.
பிப். 28: வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு அனுமதிக்குமாறு ராஜா கோரிக்கை.
மார்ச் 1: 63 பேர் விசாரணை வளையத்தில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல். ராஜா வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராவதற்கு சி.பி.ஐ., கோர்ட் அனுமதி.
மார்ச் 14: டில்லி ஐகோர்ட், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிப்பதற்கு ஸ்பெஷல் கோர்ட் ஒன்றை அமைத்தது. பல்வாவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராவதற்கு டில்லி கோர்ட் அனுமதி.
மார்ச் 29: முதல் குற்றப்பத்திரிக்கையை மார்ச் 31க்கு பதிலாக, ஏப்., 2ல் தாக்கல் செய்கிறோம் என்ற சி.பி.ஐ., யின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகிய மேலும் இருவர் கைது.
ஏப். 2: சி.பி.ஐ., சார்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.
ஏப். 25: இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. தி.மு.க., வைச் சேர்ந்த கனிமொழி "கூட்டுச்சதியாளர்' என சேர்ப்பு.
மே 6: கனிமொழி கோர்ட்டில் ஆஜர்.
மே 20: கனிமொழி ஜாமீன் மனுவை கோர்ட் நிராகரித்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

பணம் வந்த பாதை: கடந்த 2008ல் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, ஷாகித் உஸ்மான் பல்வா பங்குதாரராக இருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 1,537 கோடி ரூபாய்க்கு "2ஜி' லைசென்ஸ் வழங்கினார். ஒரு மாதத்துக்குள் 40 சதவீத பங்கை பல்வா, 4,500 கோடி ரூபாய்க்கு துபாய் நிறுவனத்துக்கு விற்று லாபம் அடைந்துள்ளார். "டிபி ரியாலிட்டி' என்ற நிறுவனத்தின் நிர்வாக மேலாளராகவும் பல்வா இருக்கிறார். இந்நிறுவனத்திலிருந்து கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளது என சி.பி.ஐ., தெரிவித்தது. லைசென்ஸ் வழங்குவதில் ராஜா சலுகை காட்டியதற்காக பல்வா, இந்த தொகையை கலைஞர் "டிவி'க்கு அளித்தாக கூறப்படுகிறது. 214 கோடி ரூபாய் கடனாக தான் பெறப்பட்டது. அதையும் வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டோம் என்று கலைஞர் "டிவி' தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2G Spectrum case DMK chief daughter kanimozhi arrested in Delhi.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts